பயணம்

ஐ!!!ரோப்பா-குதூகலம் நிறைந்த குட்டி நாடு மொனாகோ

மொனாகோ— பெயரை கேட்டதும் ஏதோ தின்பண்டம் என்று நினைத்துவிட வேண்டாம். ஐரோப்பிய கண்டத்தின் பல சின்னஞ்சிறிய நாடுகளில் ஒன்று தான் மொனாகோ. மொத்த நாட்டையும் சுற்றி பார்க்க இரண்டு நாட்கள் போதும்.
பிரான்ஸ் நாட்டின் தென்கிழக்கு கடலோர பகுதியை ஒட்டியுள்ள நீளமான நிலப்பகுதியை பிரெஞ்சு ரிவீரா (French Riviera) என்பார்கள்.அந்த நிலப்பகுதியில் இருக்கும் சிறிய நாடான மொனாகோ அதிகம் சுற்றுலா பயணிகளை ஆண்டுதோறும் ஈர்த்து வருகிறது.
Mediterranean கடலை ஒட்டியுள்ள செங்குத்தான பாறைகளால் ஆன கரையை கொண்டது இந்த மொனாகோ நாடு.

ஐரோப்பிய நாடுகளில் அதிகமான தனி மனித வருமானத்தை கொண்டிருக்கும் நாடு மொனாகோ. நீளமும் பச்சையும் கலந்த கடல், ரம்மியமான பனை மரங்கள், பல வண்ண நிறங்களில் கண்ணை கவரும் மலர்கள் என எங்கு காணினும் அழகான காட்சிகள் மட்டுமே இந்த மொனாகோ.

பதிமூன்றாம் நூற்றாண்டில் உருவான இந்த நாட்டில் இன்று ஆடம்பரமான கேளிக்கை விடுதிகளும், நட்சத்திர உணவகங்களும், சொகுசு கப்பல்களும் காண கிடைக்கின்றன. திறந்தவெளி உணவகங்கள், புயல் வேகத்தில் பாயும் பாய்மர படகுகள் என்று இந்த மொனாகோ நாடே குதூகலத்தில் வசிப்பிடமாக விளங்குகிறது.

மான்டே-கார்லோ (Monte-Carlo):

மொனாகோவின் மிக கவர்ச்சிகரமான ஊர் தான் இந்த மான்டே-கார்லோ. ஹேர்க்யூல் (Hercule) துறைமுகத்துக்கு வடக்கே கடலை பார்த்தவாறு அமைந்திருக்கும் ஊர் தான் இந்த மான்டே-கார்லோ.


இங்கு இருக்கும் Place du Casino என்ற கேளிக்கை விடுதி கடலை பார்த்தவாறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விடுதியை ஒட்டியுள்ள தெருக்கள் முழுவதும் பலவிதமான வணிக வளாகங்களும், தங்க நகை கடைகளும் அலங்கரிக்கின்றன.

பல செல்வந்தர்கள், தங்கள் பொழுதை கழிப்பதற்கு தேர்ந்தெடுக்கும் இடமாக இந்த மான்டே-கார்லோ விளங்குகிறது.

பாலைஸ் டு பிரின்ஸ் (Palais du Prince) :

1297ல் கட்டப்பட்ட ஒரு அழகிய அரண்மனை. கடல் மட்டத்திலிருந்து சற்று உயரத்தில் கட்டபட்டுள்ளதால் ஊரின் ஒட்டுமொத்த அழகையும் இந்த அரண்மனையிலிருந்து கண்டுகளிக்கலாம் . ஆரம்ப காலத்தில் ஒரு பாதுக்காப்பு கோட்டையாக இருந்த இந்த கட்டிடம், காலப்போக்கில் பல மாறுதல்களை அடைந்து, இன்று கண்ணுக்கு விருந்தளிக்கும் ஒரு அழகிய அரண்மனையாக இருக்கிறது.

தனியார் வசம் இருக்கும் இந்த அரண்மனை வருடத்தின் சில மாதங்கள் மட்டும் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து விடப்படும். பதினாறு மற்றும் பதினேழாம் நூற்றாண்டை சேர்ந்த கலைஞர்கள் கைவண்ணத்தில் உருவான ஓவியங்கள் இந்த அரண்மனை சுவர்களை அலங்கரிக்கின்றன. இந்த அரண்மனையில் நாம் காணவேண்டிய மூன்று முக்கிய அறைகள் உள்ளன. அலுவல் பணிகள் மேற்கொள்ளப்படும் ப்ளூ ரூம் (Blue Room), மரச்சட்டங்களால் அலங்கரிக்கப்பட்ட மசரின் ரூம்(Mazarin Room) மற்றும் சிம்மாசனம் இருக்கும் த்ரோன் ரூம் (Throne Room).

பதினேழாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட அழகிய தேவாலயமும் இந்த அரண்மனைஉருவாக்கப்பட்ட இரட்டை படிக்கெட்டுகள் இந்த தேவாலயத்தின் சிறப்பம்சம். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இந்த தேவாலயத்தில் சிம்பொனி இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெறும்.

Musée Oceanographique :

கடலோரம் பாறைகளின் மேல் கட்டப்பட்டிருக்கும் அருங்காட்சியகம்.இங்கு விதவிதமான வண்ண மீன்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மிகப்பெரிய பாறைகளுக்கு மேல் கட்டப்பட்டிருக்கும் இந்த பிரம்மாண்ட கட்டிடத்தை கட்டிமுடிக்க 11 ஆண்டுகளாகியிருக்கின்றன.1910 ஆண்டு திறக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் உலகின் மிக பழமையான மீன்கள் கண்காட்சிக்கூடங்களுள் ஒன்றாகும். கடல் சார் ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகளும் இங்கே மேற்கொள்ளப்படுகின்றன.

இங்கு ஆழ்கடலில் வாழும் மீன்கள் மற்றும் சுறாக்களுக்கென்று பிரத்யேக காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தின் மொட்டை மாடியில் ஒரு உணவகமும் அமைக்கப்பட்டுள்ளது. கடல் அலைகளின் அற்புத நாட்டியத்தை கண்டுகொண்டே உணவருந்தலாம்.

கிராண்ட் பிரிக்ஸ் (Grand Prix) :
உலகப்புகழ்பெற்ற கார் பந்தயமான Grand Prix பந்தயம் ஆண்டுதோறும் மே மாதம் இறுதியில் நடைபெறும். இந்த நிகழ்வைக்கான பல்வேறு நாடுகளிலிருந்து எண்ணற்ற சுற்றுலாப்பயணிகள் வந்து குவிகின்றனர்.

Monaco Harbor :

மொனாகோ நாட்டின் துறைமுகம் மலைத்தொடர்களும், கடலும் சந்திக்கும் ரம்மியமான இடத்தில் அமைந்திருக்குகிறது.இங்கு ஒரே நேரத்தில் 500 கப்பல்கள் வரை நிறுத்தக்கூடிய அளவு வசதி உள்ளது. பலவித சொகுசு கப்பல்களும், சாகசத்திற்ற்க்காக பயன்படுத்தும் பாய்மரக்கப்பல்களும் இங்கே நிறுத்திவைக்கப்பட்டுள்ள காட்சி மிக அழகாக இருக்கும்.

இவ்வளவு அழகையும் தன்னுள் தேக்கி வைத்திருக்கும் மொனாகோ நாட்டை ஒரு முறையேனும் கண்டு ரசித்து விட்டு வாருங்கள்.

 

Related posts