பயணம்

ஐ!!!ரோப்பா – பைசா நகரம் – இங்கு கோபுரங்கள் சாய்வதுண்டு!

தொலைக்காட்சியில் ஜீன்ஸ் பட பாடல் ஓடிக்கொண்டிருந்தது… பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் என்று பிரஷாந்தும் ஐஸ்வர்யாவும் உலக அதிசயங்களுக்கு முன்னால் நடனமாடிக்கொண்டிருந்தனர். பாடல் முடிகின்ற தருணத்தில் இத்தாலி நாட்டு நகரமான பைசாவில் அமைந்துள்ள சாய்ந்த கோபுரத்தை காட்டினார்கள். இந்த ஊரில் இந்த கோபுரம் மட்டும் தான் பிரபலம் போல. வேறு எதுவும் சொல்லிக்கொள்ளும்படி இந்த பைசா நகரத்தில் இருக்காது என்று நினைத்துக்கொண்டேன். இணையத்தில் பைசா நகரம் பற்றி தேடினேன்.

இந்த சாய்ந்த கோபுரம் மட்டுமின்றி பல்வேறு சுற்றுலா தலங்கள் அந்த சிறிய நகரத்தில் இருக்கின்றன. இத்தாலி நாடு என்றாலே தனி அழகு தான். அதிலும் குறிப்பாக ஒரு நகரத்தினூடே அழகான நதி ஒன்று ஓடி அந்த நகரை மேலும் அழகூட்டினால்….? பைசா நகரத்தின் மத்தியில் வளைந்து நெளிந்து செல்கிறது அர்னோ (Arno) நதி.

பைசா நகரம் வழியே ஓடும் இந்த அர்னோ நதியானது இன்னொரு அழகிய இத்தாலிய நகரமான பிளாரென்ஸ் (Florence) நகரையும் செழிப்பாக்கிவிட்டு செல்கிறது. நதியின் குறுக்கே ஆங்காங்கே பைசா நகரத்தின் இரு கரைகளையும் இணைக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள எண்ணற்ற பாலங்கள். ஒவ்வொரு பாலமும் தனி அழகு. பாலமும் ஆறும் சேர்ந்து ஓவியம் போல காட்சியளிக்கும் அழகை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. இந்த பாலங்களை கட்டியவர்கள், இந்த நகரை உருவாக்கியவர்கள் என அனைவரும் தங்களால் இயன்ற அளவுக்கு இந்த நகரை அழகுபடுத்தி, நூற்றாண்டுகள் கடந்தாலும் அந்த அழகு ஒரு துளி கூட குறையாமல் எப்போதும் புதுப்பொலிவுடன் இருக்குமாறு அமைத்திருக்கின்றனர். இது அவர்களின் கடமையுணர்வையும் தொலைநோக்கு பார்வையையும் நமக்கு புரிய வைக்கிறது.

அர்னோ நதியின் இரு கரைகளிலும் கண்ணுக்கு விருந்தளிக்கும் அழகான கட்டிடங்கள்…அவற்றுள் பல கட்டிடங்கள் நூற்றாண்டுகள் பழமையானவை..ஆனால் பார்ப்பதற்கு போன வாரம் தான் கட்டி முடிக்கப்பட்டது போல் புத்தம் புது பொலிவுடன் இருக்கின்றன. கரைகளை இணைக்கும் பாலங்களுக்கு அருகில் அமைந்திருக்கும் பாதைகளுக்கு லுங்கர்னோஸ் (Lungarnos) என்று பெயரிட்டுள்ளனர் இத்தாலியர்கள். இப்பொழுது இருக்கும் பாலங்களை விட அதிக எண்ணிக்கையில் பாலங்கள் முன்பு இருந்தனவாம். இரண்டாம் உலகப்போரின் போது குண்டுவீச்சில் பல பாலங்கள் சேதமடைந்தன.

பைசா நகரம் பழமையான நகரம் என்பதால் இதன் பழமையை உலகறிய செய்யும் விதத்தில் இங்கு சில அருங்காட்சியகங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் முக்கியமானது புனித மத்தேயு அருங்காட்சியகம். இத்தாலி நாட்டு கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவான எண்ணற்ற ஓவியங்களும் சிற்பங்களும் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்களும் இங்கே காண கிடைக்கின்றன.

பைசா நகரத்தின் மிகவும் வயது குறைந்த அருங்காட்சியகம் என்று சொல்லப்படும் கப்பல் அருங்காட்சியகமும் பார்க்க வேண்டிய இடங்களுள் ஒன்று. இந்த அருங்காட்சியகம் உருவானதற்கு பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதையும் உள்ளது. 1998 ஆம் ஆண்டில், இந்த பைசா நகரத்தில் ரயில் தண்டவாளங்கள் அமைக்கும் பணி நடைப்பெற்றுக்கொண்டிருந்தன. அப்பொழுது கட்டுமான பணிகளுக்காக நிலத்தை தோண்டியபோது பல நூற்றாண்டுகளுக்கு முன் வெள்ளத்தில் சிக்கி மூழ்கிப்போன முப்பதுக்கும் மேற்பட்ட கப்பல்கள் கண்டெக்கப்பட்டன. அந்த கப்பல்களை ஒரு அருங்காட்சியகத்தில் வைக்க எண்ணி, இதற்கென்று பிரத்யேகமாக ஒரு அருங்காட்சியகத்தை கட்டினார்கள்.

 

அருங்காட்சியகங்களுக்கு அடுத்தபடியாக இந்த பைசா நகரத்துக்கு பல சுற்றுலா பயணிகளை ஈர்ப்பது இங்குள்ள கம்பீரமான அரண்மனைகள் தான். பல நூற்றாண்டுகள் பழமையான இந்த அரண்மனைகளில் இத்தாலியின் பல்வேறு இடங்களை ஆட்சி செய்த மன்னர்கள் பயன்படுத்திய வாழ் மற்றும் ஆடைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

பைசா நகரத்தின் புராதனமான சுற்றுலா தலம் முதலாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட குளியல் மண்டபங்கள் தான். முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த பண்டைய ரோமாபுரி மக்கள் குளிப்பதற்கு வெந்நீர் மற்றும் நீராவி உற்பத்தி செய்து அதில் பொழுதை கழிக்க உருவாக்கப்பட்ட இடம் தான் இது. காலப்போக்கில் சிதிலமடைந்தாலும் இன்னும் சில பாகங்கள் பாதுகாக்கப்பட்டு சுற்றுலா பயணிகளின் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.


PIAZZA DEI CAVALIERI என்று அழைக்கப்படும் சதுக்கம் தான் இந்த பைசா நகரத்தின் மையப்பகுதி. பிரபலமான பல்கலைக்கழகங்கள், அரசாங்க கட்டிடங்கள் என அனைத்தும் இந்த சதுக்கத்தில் தான் நிறுவப்பட்டுள்ளன.

சாய்ந்த கோபுரம் : 

உலகப்புகழ் வாய்ந்த இந்த சாய்ந்த கோபுரம் 1173 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த கோபுரத்தின் முதல் இரண்டு நிலைகளை நிறுவியபோது மற்ற கட்டிடங்களை போல இதுவும் செங்குத்தாகவே நின்றிருந்தது.ஆனால் மூன்றாவது நிலையை கட்டும்போது இந்த கோபுரம் சற்றே சாயத்தொடங்கியது. கோபுரத்தின் அஸ்திவாரத்தில் உள்ள மண் அதிக எடையை தாங்கும் திறனற்று இருந்ததே, இந்த சாய்வுக்கு காரணம் என்று அறியப்பட்டது. அதன் பின்னர், இந்த கோபுரத்தின் கட்டுமானம் பல ஆண்டுகளுக்கு நிறுத்திவைக்கப்பட்டு, மீண்டும் 1275 ஆம் ஆண்டு தொடரப்பட்டது. மீதமுள்ள மூன்று நிலைகளும் எதிர்பக்கம் சாய்வது போல கட்டப்பட்டன. இவ்வாறு கட்டுவதால், கோபுரம் முழுவதுமாக ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் தாங்கி பிடித்துக்கொள்ளும்படியான ஒரு அமைப்பை உருவாக்க முடிந்தது பண்டைய ரோமாபுரி கட்டிட கலைஞர்களால்.

 

எத்தனையோ நூற்றாண்டுகளாக கட்டிட கலையில் தேர்ச்சிபெற்ற எண்ணற்ற கட்டுமான கலைஞர்களும், விஞ்ஞானிகளும் இந்த பைசா கோபுரத்தை நிமிர்ந்து நிற்கவைக்க எவ்வளவோ முயன்று தோற்று தான் போனார்கள். இன்று நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, இந்த கோபுரம் மேலும் சாய்ந்து விடாமல் இருக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சாய்ந்த கோபுரத்தையும், மொத்த இத்தாலி நாட்டின் அழகையும் தனக்குள் சுருக்கி வைத்துக்கொண்டு எப்பொழுதும் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் பைசா நகரத்தையும் வாழ்க்கையில் ஒரு தடவையாவது நேரில் சென்று கண்டுகளிக்க வேண்டும்.

 

Related posts