பிரம்மாண்டமான படங்களின் அடையாளமாக மாறியிருக்கும் ராஜமௌலி அவர்களின் இயக்கத்தில் உருவாகி மாபெரும் ஹிட் அடித்த படம் பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2. அவரது அடுத்த படைப்பின் மீது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரிக்க ஆர்ஆர்ஆர் படத்தின் செய்திகளை வெளியிட்டார் ராஜமௌலி. ஆர்ஆர்ஆர் படம் மெகா பட்ஜெட்டில் 3d மற்றும் 2d தொழில் நுட்பத்தில் உருவாகி, பல மொழிகளில் டப் செய்யப்பட்டு உலகம் முழுவதும் கடந்த மார்ச் 24 அன்று வெளியானது.
ரத்தம் ரணம் ரௌத்தரம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன், ரே ஸ்டீவன்சன், ஒலிவியா மோரிஸ், சமுத்திரகனி, ஸ்ரேயா சரண் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படத்திற்காக 41 நாட்களாக விரதம் இருந்துவந்த ராம்சரண் ஆர்ஆர்ஆர் படம் வெளியாகி வசூலை வாரிகுவிக்க சபரிமலைக்கு செல்லவுள்ளார் என செய்திகள் வெளியாகின.
இந்தியாவின் சுதந்திர போராட்ட காலத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய தெலுங்கு மாநிலத்தைச் சேர்ந்த அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ஆர்.ஆர்.ஆர் படத்தின் கதைக்களத்தை அமைத்திருந்தார் இயக்குனர் ராஜமௌலி. இது ஒரு பீரியா டிக் படம் என்பதால் தயாரிப்பு செலவு அதிகமாக, ஆர்ஆர்ஆர் படம் ஒரு மெகா பட்ஜெட் படமாக மாறி மொத்த எதிர்பார்ப்புடன் வெளியானது.
தெலுங்கில் மட்டும் இப்படம் 200 கோடி வசூலையும், உலக அளவில் 800 கோடி வசூலையும் கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கில் இதுவரையிலும் அதிக வசூலைப் பெற்ற படமான பாகுபலி 2 படம் 204 கோடியுடன் முதலிடத்தில் இருந்தது. தற்போது அந்த வசூலை ஆர்ஆர்ஆர் கடந்து 210 கோடியைப் இதுவரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆர்ஆர்ஆர் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் மும்பை வந்திருந்த ராம்சரண் கருப்பு நிறத்தில் குர்தா அணிந்து கொண்டு கையில் காவித்துணியுடன் வெறும் காலுடன் காணப்பட்டார். அவர், ஐயப்பன் சாமிக்கு மாலை போட்டுவிரதம் இருப்பதாகவும், ஆண்டுதோறும் 41 நாட்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு செல்வதை ராம்சரண் வழக்கமாக கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் ராம்சரண் ஒரு திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு தற்காலிகமாக RC15 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில், கியாரா அத்வானி, ஜெயராம், அஞ்சலி, சுனில், ஸ்ரீகாந்த் மற்றும் நவீன் சந்திரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை தெலுங்கு பட உலகின் மிகப்பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷனின் தில் ராஜூ தயாரிக்கிறார்.