பயணம்

ஐ!!!ரோப்பா – அதிகம் அறியப்படாத நாடு பெலாரஸ்

உக்ரைன் நாட்டுக்கும் பால்டிக் (Baltic) நாடுகளுக்கும் இடையே அமைந்துள்ள அழகிய நாடு தான் பெலாரஸ். பெரிய நாடாக இருந்தாலும், இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஏனைய ஐரோப்பிய நாடுகள் ஈர்க்கும் அளவுக்கு,பெலாரஸ் சுற்றுலா பயணிகளை ஈர்க்காமல் விட்டதே இதற்கு காரணம்.

பாதி நாட்டுக்கும் மேல் அடர்ந்த காட்டுப்பகுதி தான். அதை தவிர அழகான நதிகளும் ஏரிகளும் நிறைந்து காணப்படும் இந்த பெலாரஸ் நாடு, வெளிநாட்டவர் கால் தடம் அதிகமாக படாமல், தன்னுடைய அழகை அப்படியே தக்க வைத்துக்கொண்டுள்ளது. மீன் பிடிப்பதற்கும், கேனோ (Canoe) மற்றும் காயாக் (Kayak) எனப்படும் சிறிய படகுகளை ஓட்டுவதற்கும் ஏதுவான இடங்கள்.

பெலாரஸ் நாட்டின் தலைநகரம் மின்ஸ்க் (Minsk ) பழமையும் புதுமையும் கலந்த கட்டிட கலையும் சிறிய பூங்காவனங்கள் நிறைந்த சாலைகளும் நிறைந்த நகரமாகும்.

குடும்பத்தினருடன் குறைந்த பட்ஜெட்டில் ஒரு வெளிநாட்டு பயணம் செல்ல திட்டமிடுபவர்களுக்கு பெலாரஸ் நாடு ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம்.

பெலாரஸ் நாட்டின் மேற்கு எல்லையில் உள்ள நகரம் தான் க்ரோட்னோ(Grodno) . பெலாரஸ் நாட்டின் மிக புராதனமான கலோசா தேவாலயம் இந்த நகரத்தில் தான் உள்ளது. இந்த தேவாலயத்தை காண நிறைய சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

 

அதன் அருகிலேயே அமைந்துள்ள க்ரோட்னோ அருங்காட்சியகமும் காண வேண்டிய இடங்களில் ஒன்றாகும். கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கருவிகள் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதே பெலாரஸ் நாட்டில் உள்ள வேறொரு அருங்காட்சியகம் தான் மின்ஸ்க் நகரில் உள்ள டுடுட்கி (Dudutki) அருங்காட்சியகம். இதை வாழும் அருங்காட்சியகம் என்றும் அழைக்கிறார்கள். 17 முதல் 20 ஆம் நூற்றாண்டு வரை பெலாரஸ் நாட்டில் வாழ்ந்த மக்களின் வாழ்வு முறையை தத்ரூபமாக இங்கே காட்சிபடுத்தியுள்ளனர்.

ஐரோப்பாவின் நுரையீரல் என்று அழைக்கப்படும் பிரிப்யாட்ஸ்கி (Pripyatsky) தேசிய பூங்கா அமைந்திருப்பதும் இந்த பெலாரஸ் நாட்டில் தான். ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு கொண்ட அடர்ந்த காடுகளும், நீர்நிலைகளும் நிறைந்த இயற்கை எழில் கொஞ்சும் அற்புதமான பூங்கா. விதவிதமான உயிரினங்களுக்கு வாழ்விடமாக அமைந்திருக்கும் இந்த பூங்கா , மீன் பிடிப்பதற்கும் மலையேற்றத்துக்கும் ஏதுவான இடமாக இருப்பது கூடுதல் சிறப்பு.

இரண்டாம் உலகப்போரின்போது 1833 முதல் 1842 ஆண்டு காலகட்டத்தில் கட்டப்பட்ட ப்ரெஸ்ட் (Brest) கோட்டை இன்றும் தனது கம்பீரம் மாறாமல் காட்சியளிக்கிறது. துப்பாக்கி ரவைகள் தாக்கிய வடுக்களை இன்றும் தனது சுவற்றில் சுமந்து நிற்கிறது இந்த கோட்டை.

16 ஆம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட மிர் (Mir) அரண்மனையும் காண வேண்டிய இடங்களுள் ஒன்று தான். சிவப்பு மற்றும் வெள்ளை கற்களால் கட்டப்பட்ட இந்த அரண்மனையின் பிம்பம் அதன் முன் இருக்கும் குளத்தில் விழுந்து காட்சியளிப்பது நம் கண்களுக்கு விருந்தளிக்கும்.

அதிக சுற்றுலா பயணிகள் வராத இந்த பெலாரஸ் நாடு குறைந்த செலவில் சுற்றி பார்க்க சரியான தேர்வு என்றே கூறலாம்.

Related posts