ஆன்மீகம்

மஹாவதார் பாபாஜி – ஒளிரூபமாய் வாழும் கிரியா யோகி

மகாவதார பாபாஜியின் பிறப்பு மற்றும் வாழ்க்கை தொடர்பான வரலாற்றுப் பதிவுகள் எதுவும் இல்லை என்று பலரும் எண்ணுகிறார்கள். ஆனால், இம்மகாயோகியின் பூர்வீகம் நம் தமிழ்நாடு என்பது பெரும்பாலானோர் அறியாத செய்தி. கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த பரங்கிப்பேட்டையில் கி.பி.203-ம் ஆண்டு கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் சுவேதாநாத அய்யருக்கும், ஞானாம்பிகை அம்மையாருக்கும் மகனாக பாபாஜி பிறந்தார். இவருடைய இயற்பெயர் நாகராஜ்.

இவர் அவதரித்த நாள் கார்த்திகை தீப திருநாள் ஆகும். இவர் 11-வது வயதில் இறை அனுபவம் பெற ஞானியர்களுடன் இணைந்து கதிர்காமத்திற்கு புனிதபயணம் மேற்கொண்டார். அங்கு போகரை சந்தித்து யோக சாதனைகளை பயின்றார். அவரிடம் தீட்சையும் பெற்றார். பின்னர் இவர் போகரின் குருவான அகத்தியரை காண திருக்குற்றால மலையை அடைந்தார்.

அகத்தியரை நினைத்து 48 நாட்கள் கடும் தவம் இருந்தார். இவரின் அளவற்ற அன்பினை பார்த்த அகத்தியர். பாபாஜிக்கு கிரியா குண்டலினி பிராணாயாமத்தை உபதேசித்து அருளினார். இமயமலையில் உள்ள பத்ரீநாத் சென்று தவம் செய்து ஒளிஉடம்பினை(மரணம் இல்லா பெறுவாழ்வு) பெறுவாய் என்று பாபாஜிக்கு அகத்தியர் அருளினார். அவரது ஆணைப்படி பாபாஜி இமயமலையின் மேல் உச்சியில் தவசாலை அமைத்தார். இன்றும் அவர் ஒளிவடிவாய் அங்கு வாழ்ந்து வருகிறார். பாபாஜி பிறந்த பரங்கிப்பேட்டை மண்ணில் இவருக்கு ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது.

தன் தவத்தால் அற்புத ஆற்றல்களைப் பெற்ற இம்மகான் தன் ஊணுடலைத் துறந்து, ஒளி உடம்பைப் பெற்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருவதாக இவரை வழிபடுபவர்கள் கூறுகிறார்கள்.

பரமஹம்ஸ யோகானந்தர், “ஒரு யோகியின் சுயசரிதம்”  என்ற தனது புத்தகத்தில் , இந்த மரணமற்ற அவதாரம் இந்தியாவின் தொலை தூர இமாலயப் பகுதிகளில் எண்ணற்ற ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார், ஆசீர்வதிக்கப்பட்ட சிலருக்கு மட்டுமே அரிதாக தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறார் என்று பாபாஜியைப்பற்றி எழுதியுள்ளார்.

மகாவதார பாபாஜி தான், காலத்தால் அழிந்து போன,மறக்கப்பட்ட “கிரியா யோக” விஞ்ஞான தியான உத்தியை இந்த யுகத்தில் மீண்டும் உயிர்ப்பித்தவர். பாபாஜியின் கிரியா யோகமானது கடவுள் எனும் மெய்யறிவுடன் ஒருமித்து ஆன்மானுபவம் பெறுவதற்கான ஒரு விஞ்ஞானபூர்வமான கலையாகும். பண்டைய பதினெண் சித்தர் மரபில் கற்பிக்கப்பட்ட யோக முறைகளைத் தொகுத்து அவற்றிலிருந்து கிரியா யோகத்திற்கு உயிரூட்டினார் இந்தியாவின் மாபெரும் சித்தர்களில் ஒருவரான மஹாவதார் பாபாஜி.

தனது சீடர் லாஹிரி மகாசயருக்கு கிரியா தீட்சையை வழங்கியபோது, “நான் இந்த பத்தொன்பதாவது நுற்றாண்டில் உன் மூலமாக இவ்வுலகிற்கு அளிக்கும் கிரியா யோகம், பகவான் கிருஷ்ணர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் அர்ஜுனனுக்கு அளித்த அதே விஞ்ஞான முறையின் புனருத்தாரணமாகும். பிறகு அது பதஞ்சலிக்கும், கிறிஸ்துவிற்கும், புனித யோவான், புனித பவுல் மற்றும் வேறு சீடர்களுக்கும் தெரிந்திருந்தது” , என்று கூறினார்.

பாபாஜி, காலத்தால் கட்டுப்படுத்த முடியாதவர். இயற்கைக்கும், விஞ்ஞானத்திற்கும் அப்பாற்பட்டவர். அவரை எவ்வாறு அணுகுவது என்று சிந்தித்து கவலையுற வேண்டாம்.தேடிக்கண்டுபிடிக்க நினைத்து அலைவதை நிறுத்திவிட்டு, ஆத்மார்த்தமாக அவரிடம் சரணடைந்து அவரையே மனதுள் இருத்தி தியானம் செய்தால், நாம் தேடிப் போகாமலேயே அவர் நம்மைத் தேடி வருவார்.

 

 

Related posts