இந்தியாவில் கொரோன பாதிப்பு முற்றிலும் குறைந்துவிட்டது என்று நாம் ஆசுவாசப்படும்போது, XE வகை கொரோன புதிய விதமான பாதிப்பை மக்களிடம் ஏற்படுத்த தொடங்கியுள்ளது.
இங்கிலாந்த், தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் பரவும் XE வகை கொரோனா என்பது கலப்பு வகை கொரோனா ஆகும். இரண்டு வகையான கொரோனாக்கள் இணைந்து புதிதாக உருவாகியிருக்கும் கொரோனா வகை இது. இது ஓமிக்ரானின் BA.1 மற்றும் BA.2 வகை உருமாற்றங்கள் இணைந்து உருவான புதிய வகையான வைரஸ் என்று கூறப்படுகிறது.
ஓமிக்ரானில் மூன்று உட்பிரிவு உள்ளது. BA.1, BA.2, மற்றும் BA.3. இதில் இந்தியாவில் BA.1 அதிக அளவில் பரவி வந்தது. ஓமிக்ரான் BA.2 என்பதுத ஸ்டெல்த் ஓமிக்ரான் ஆகும். இந்த முதல் இரண்டு வகையும் இணைந்து உருவாக்கிய ஒன்றுதான் XE கொரோனா. இந்த புதிய வகை கொரோனா முதல் முறையாக யுகேவில் கடந்த ஜனவரி மாதம் கண்டறியப்பட்டது. 600 க்கும் மேற்பட்ட நபர்கள் இதுவரை அங்கு XE கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஓமிக்ரான் கொரோனாவை விட இது 10 மடங்கு வேகமாக பரவ கூடியது என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவில் மும்பையில் வசிக்கும் ஒரு நபருக்கு XE வகை கொரோனா இருப்பதாக மும்பை மாநகராட்சி சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தது. இதை இந்திய ஜீனோம் கூட்டமைப்பு தரப்பு முற்றிலும் மறுத்தது. ஜீனோம் சோதனையில் அப்படியான எந்த முடிவும் வரவில்லை என்று கூறியுள்ளது. இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறையும் நிராகரித்தது.
தற்போது, குஜராத்தில் ஒருவருக்கு XE வகை கொரோனா இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தி இந்து செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், குஜராத்தில் குறிப்பிட்ட ஒரு நபருக்கு எடுக்கப்பட்ட கொரோனா சாம்பிள் தேசிய நோய் கட்டுப்பாட்டு பிரிவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் செய்யப்பட்ட ஜீன் சோதனையில் அந்த நோயாளிக்கு XE கொரோனா தாக்கி இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டிருந்தது. இந்த தகவலை தேசிய ஜீனோம் கழகமும், மத்திய அரசும் இன்னும் உறுதி செய்யவில்லை.
கொரோனா முதல் அலை மற்றும் கொரோனா இரண்டாம் அலையினால் ஏற்பட்ட பாதிப்பே இன்னும் இந்தியாவில் முழுதாக தீர்ந்த பாடில்லை. இந்நிலையில் புதிதாக கண்டறியப்பட்டிருக்கும் XE வகை கொரோனா இந்தியாவில் பரவ தொடங்கினாள் அது மக்களுக்கும் அரசுக்கும் பெரிய சவாலாக அமைய வாய்ப்புள்ளது. XE வகை கொரோனா பத்து மடங்கு வேகமாக பரவக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.