பயணம்

ஐ!!!ரோப்பா-ஜெர்மனியின் செந்தேன் மலரே! – பாகம் 2

கொப்ளேன்ஸ் மற்றும் ரயின் பள்ளத்தாக்கு :

ரயின் ஆற்றில் ஓடும் சொகுசு கப்பல்களில் பயணசீட்டு பெற்று அமர்ந்தால், சில நிமிடங்களில் கொப்ளேன்ஸ் (Koblenz ) என்னும் அழகான நகரத்தை அடையலாம். இந்த நகரத்தை அடைந்தவுடன் முதலில் பார்க்க வேண்டிய இடம் German Corner  எனப்படும் இடம் தான். ரயின் மற்றும் மோஸேல் (Mosel ) நதிகள் இரண்டும் சங்கமிக்கும் இடம் தான் இந்த German Corner. இந்த அழகான இடத்தில் ஜெர்மன் மன்னராக இருந்த முதலாம் வில்ஹெல்ம் (Wilhelm 1 ) அவர்களுக்கு ஒரு சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை, ஜெர்மனி நாட்டு ஒற்றுமையை குறிக்கும் சிலை என்று இங்கு வசிப்பவர்கள் கூறுகிறார்கள்.

நல்ல மாலை பொழுதில் நீங்கள் இந்த இடத்திற்கு வந்தீர்கள் என்றால், சிம்பொனி இசைக்கச்சேரியுடன், மாலை மங்கும் மஞ்சள் வெளிச்சத்தில் இரண்டு நதிகள் சங்கமிக்கும் அற்புத காட்சியை காணலாம். இந்த சங்கமத்தை இன்னும் தெளிவாக பார்வையிட கேபிள் கார் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த கேபிள் கார் மூலம் குன்றின் மீது இருக்கும் Ehrenbreitstein கோட்டையை சென்றடையலாம்.

யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட இந்த கோபிளெய்ன்ஸ் நகரமும் ரயின் பள்ளத்தாக்கும் இயற்கை அழகு நிறைந்து நம் கண்களுக்கு விருந்தளிக்கிறது.

பேடன்- பேடன் மற்றும் பிளாக் போரஸ்ட் (Black Forest ) : 

பெரும் செல்வந்தர்களும், மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்களும், தங்கள் உடல் சோர்வை போக்கிக்கொள்ள தேர்ந்தெடுத்த நகரம் தான்  பேடன்- பேடன்.இந்த பேடன்-பேடன் நகரத்தில் உள்ள Kurgarten தோட்டம் கண்டிப்பாக காண வேண்டிய ஒன்று. பண்டைய ரோமாபுரி மக்கள் இந்த தோட்டத்திற்கு வந்து இளைப்பாறினார்களாம். இங்கே ஸ்பா (Spa ) வசதியை அந்த காலத்திலேயே அமைத்து விட்டார்கள். இன்றளவும் இந்த இடம் பிரமிப்பை தருகிறது.

இந்த Kurgarten என்னும் சிற்றூரில் பல உணவகங்களும்,வணிக வளாகங்களை உள்ளன. ஜெர்மனியின் கலாச்சாரத்தை எடுத்துக்கூறும் விதமாக உருவாக்கப்பட்ட நிறைய கைவினைப்பொருட்களும் இங்கே விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த ஊரில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி ஏற்பாடு செய்யப்படும் சிறப்பு அங்காடியை காண உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் வருகின்றனர்.

1824 ஆம் ஆண்டு பிரெஞ்சு கட்டிட பாணியில் கட்டப்பட்ட Kurhaus எனும் தங்கும் விடுதியும் இங்கு உண்டு.

பேடன்-பேடன் நகரத்தை விளையாட்டு பிரியர்களின் சொர்கம் என்றே கூறலாம். இங்கே கோல்ப்(Golf ), டென்னிஸ் விளையாட்டுகள் முதல் குதிரை பந்தயம் வரை நடைபெறுகிறது. கோடைகாலத்தில் இங்கே மலையேற்றம் நடைபெறுகிறது.

இங்குள்ள கறுப்பு வனம் (Black Forest ), குளிர்காலங்களில் அதிக அளவு பனிப்பொழிவை சந்திக்கிறது. எனவே இங்கு பனிச்சறுக்கு போன்ற சாகச விளையாட்டுகளும் நடத்தப்படுகின்றன.

 

நூரெம்பெர்க் (Nuremberg ) :

இரண்டாம் உலகப்போரின் போது முழுவதுமாக அழிக்கப்பட்ட இந்த நகரம், அதன் பழமை மாறாமல் மீண்டும் கட்டி எழுப்பப்பட்டது.இடிந்து போன நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடங்களை சிறிதளவு கூட புதுமையை புகுத்தாமல் அப்படியே மறுபடியும் கட்டி முடித்தார்கள். இன்று இந்த நகரத்தில் காணும் பல கட்டிடங்கள் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது போல தோன்றினாலும், அவை யாவும் இரண்டாம் உலக போர் முடிந்த பிறகு கட்டப்பட்டவையே.

இந்த நூரெம்பெர்க் நகரில் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு மதில் சுவர் கட்டப்பட்டிருக்கிறது. 1300களில் இந்த நகரத்தை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க அந்த காலத்து மன்னர்களால் எழுப்பப்பட்ட மதில் சுவர் தான் இது. நகரத்தின் மேற்கு பக்கத்திலிருந்து பார்த்தால் இந்த சுவரின் அழகையும் ப்ரம்மாண்டத்தையும் நன்றாக கண்டு ரசிக்கலாம். நிறைய குறுக்கு வழிகளும் ரகசிய பாதைகளும் இடை இடையே காணப்படுகிறது.

இந்த மதில் சுவரை கண்டுகளித்த பின், நேரே செல்ல வேண்டிய இடம் நூரெம்பெர்க் அரண்மனை. பதினோராம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த அரண்மனையின் அழகை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. அரனமணியை சுற்றிலும் நிறைய கடைகள், உணவகங்கள், என சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக எல்லா அம்சங்களும் இங்கே அமைக்கப்பட்டுள்ளன. அரண்மனை வளாகத்தில் ஒரு அருங்காட்சியகமும் உள்ளது.

பிராங்க்பர்ட்  (Frankfurt ) :

ஜெர்மனி நாட்டின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்று தான் பிராங்க்பர்ட் நகரம். பல நூற்றாண்டுகளாக தனி நாடாளு போல சுதந்திரமாக விளங்கிய இந்த நகரம், அதன் பழமையும் புதுமையும் கலந்த கட்டிடங்களாலும், இன்னும் பல சுற்றுலா தலங்களாலும் எண்ணற்ற மக்களை தன்னை நோக்கி ஈர்த்து வருகிறது.

மெயின் நதியின் கரையில் உருவான இந்த நகரம் Römerberg என்றழைக்கப்படும் பிரபலமான சதுக்கத்தின் வசிப்பிடமாக திகழ்கிறது.  பழங்கால வீடுகள், சிறிய கடைகள் என்று கண்களுக்கு விருந்து வைக்க இங்கு ஏராளமான அம்சங்கள் உள்ளன.

பழமை ஒருபுறம் இருந்தாலும், இந்தபிராங்க்பர்ட் நகரத்தின் புதுமையும் பாராட்டத்தக்கது தான். நியூ யார்க் நகரில் உள்ள விண்ணை முட்டும் கட்டிடங்களை போன்றே இங்கும் பல அடுக்குமாடி கட்டிடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் பிரம்மாண்டமான முறையில் இங்கு புத்தக கண்காட்சியும் நடைபெறுகிறது. எண்ணற்ற அருங்காட்சியகளும் இந்த நகரில் உள்ளன.

ஹாம்பர்க்(Hamburg ) :

வடக்கு ஜெர்மனியில் அமைந்திருக்கும் இந்த நகரத்தை ஜெர்மனியின் நுழைவாயில் என்றும் கூறுவார்கள், எல்பே (Elbe ) நதிக்கரியில் அமைந்திருக்கும் இந்த நகரம், ஜெர்மனியின் இரண்டாவது பெரிய நகரமாகும்.நோர்த் கடலுக்கு அருகாமையில் இருப்பதால், இந்த நகரம் ஒரு துறைமுக நகரமாகவும் விளங்குகிறது.

பல நாடுகளுக்கு பொருட்களை ஏற்றி செல்லும் வணிக கப்பல்களும் இந்த துறைமுகம் வழியாக செல்கின்றன. சரித்திர புகழ்வாய்ந்த இந்த நகரத்தில் கப்பல் போக்குவரத்து மற்றும் கடல் சார்ந்த பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் ஒரு அருங்காட்சியகமும் வைக்கப்பட்டுள்ளது.

வரலாறும் இயறக்கை அழகும் கலந்த ஜெர்மனியை நேரில் சென்று ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும். மறக்க முடியாத ஆச்சரியங்களையும் மகிழ்ச்சி நிறைந்த அனுபவங்களையும் தர காத்திருக்கிறது ஜெர்மனி.

 

 

Related posts