இந்தியா

சூனியம் வச்சிட்டாங்க சார்.. காவல் நிலையத்தில் புகார் அளித்த வாலிபர்!

திருட்டு போய்விட்டது, கொள்ளை அடித்துவிட்டார்கள், வழிப்பறி செய்துவிட்டார்கள், நடந்தது கொலையா என கண்டுபிடியுங்கள் என்று பல காரணங்களுக்காக நாம் காவல் நிலையம் சென்று புகார் அளித்திருப்போம். ஆனால், கர்நாடக மாநிலத்தில் ஒருவர் தனக்கு இரவில் தூக்கம் வரவில்லை, உடம்பு வலிக்கிறது. யாரோ எனக்கு சூனியம் வைத்துவிட்டார்கள் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், சூனியக்காரர்களை கண்டுப்பிடித்து சிறையில் தள்ளவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டம் கால்வேகல்லாபுரா கிராமத்தை சேர்ந்தவர் வீரய்யா ஹிரேமட். 30 வயதாகும் இவர் பியூசி வரை படித்துள்ளார். கடந்த சில நாட்களாக இரவில் தூக்கம் இன்றி தவிக்கும் அவருக்கு இரவில் கை, கால் உள்பட உடல் வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவர் தொடர்ந்து கஷ்டப்பட்டு வந்துள்ளார்.

உடலில் எதாவது பிரச்சனை இருக்கலாம் என நினைத்த வீரய்யா ஹிரேமட், ஹாவேரி, சிக்காம், உப்பள்ளி, மணிப்பால் என பல இடங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்றுள்ளார். டாக்டர்கள் உடலை பரிசோதனை செய்து பார்த்துவிட்டு அவரது உடலில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறிவிட்டனர்.

ஆயினும், வீடு திரும்பிய வீரய்யா ஹிரேமட் தூக்கம் வராமல் தவித்திருக்கிறார். இதைப்பற்றி பலரிடம் யோசனைகளை கேட்டுள்ளார். உறவுக்காரர் ஒருவர், ‛உனக்கு சூனியம் வைத்துள்ளனர். இதனால் தான் தொடர்ச்சியாக வலியால் தூக்கமின்றி தவிக்கிறாய்’ என கூறியுள்ளார். இதையடுத்து ஜோதிடர்களிடம் வீரய்யா ஹிரேமட்டை அழைத்து சென்றுள்ளார். எதுவும் தனக்கு பயனளிக்காத நிலையில் வீரய்யா ஹிரேமட் அடூர் போலீஸ் நிலையத்தில் தனக்கு யாரோ சூனியம் வைத்துவிட்டார்கள் என்று புகார் அளித்துள்ளார்.

வீரய்யாவின் இந்த பிரச்சனைக்குறித்து மனநல மருத்துவர்களிடம் கேட்டால் வேறுவிதமாக பதிலளிக்கின்றனர். ‘வீரய்யா குழப்பமான மனநிலையில் உள்ளார். இதை மருத்துவ மொழியில் ‛ஸ்கிசோப்ரினியா’ என்பர். இது தீர்க்க முடியாத பிரச்சனை இல்லை. மனநல டாக்டர்களிடம் ஆலோசனைகள் பெறுவதன் மூலம் தீர்வு காணலாம்’ என கூறுகின்றனர்.