ஆன்மீகம்

சைவ வைணவ ஒற்றுமைக்கு வித்திட்ட பேயாழ்வார் !

முதலாழ்வார் மூவருள் மூன்றாமவராக விளங்குபவர் இவர். இவர் தொண்டைநாட்டில் உள்ள சென்னை நகரின் ஒரு பகுதியான திருவல்லிக்கேணிக்குத் தென்திசையிலுள்ள திருமயிலையில் (மயிலாப்பூர்) ஒரு கிணற்றில் மலர்ந்த செவ்வல்லி மலரில் உதித்தவர் என்பர். ஐப்பசி மாதம் சதய நட்சத்திரம் கூடிய நாளில் பிறந்த இவர் திருமாலின் நந்தகம் என்னும் வாள் அம்சமாகப் பிறந்தவர்.

இவர் திருமாலிடம் ஆழ்ந்த அன்புடையவர். இவருடைய பக்தி வைராக்கியத்தால் இவர் செய்த செயல்கள் சராசரி மனிதரினும் வேறுபட்டவராக இவரைக் காட்டின. தம்மை மறந்த நிலையில், பேய் பிடித்தவர் போல, கண்கள் சுழலும்படி விழுந்தார்; சிரித்தார்; தொழுதார்; குதித்து ஆடினார்; பாடினார்; அலறினார். இதனால் இவரைப் பேயாழ்வார் என்று யாவரும் கொண்டாடினர்.

பேயாழ்வார், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்கள் எனப்படும் வைணவ நூல்களின் தொகுப்பில் நூறு வெண்பாக்களை கொண்டுள்ள மூன்றாம் திருவந்தாதியைப் பாடியவர்.

பேயாழ்வார், பொய்கையாழ்வார் மற்றும் பூதத்தாழ்வாருக்கு சமகாலத்தவர். இவர்கள் மூவரும் ஞான, பக்தி, வைராக்கியங்கள் மிகுந்த வகையில் துறவறம் பூண்டு, ஆண்டவனின் நினைவிலேயே உருகி உள்ளம் கனியப் பாடியவர்கள். உண்டியே உடையே என உகந் தோடும் மக்களோடு கலவாமல் ஒரு நாள் இருந்த இடத்தில் ஒரு நாள் இராமல் ஒருவரை ஒருவர் அறியாமல் தனித்தனியே இறைவுணர்வுடன் சஞ்சரித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது இறைவனுடன் ஏற்ப பட்ட ஆனந்தம் உள்ளடங்காமல் செய்யுள் வடிவமாக வெளி வரலாயிற்று. அச்செய்யுள் தொகுதி முறையே பொய்கையாழ்வாருடைய முதல் திருவந்தாதி, பூதத்தாழ் வாருடைய இரண்டாம் திருவந்தாதி, பேயாழ்வாருடைய மூன்றாம் திருவந் தாதி எனப் பெயர் பெற்றன.

இந்து சமயத்தின் பிரிவுகளான சைவம் வைணவம் இரண்டும் ஒன்றே என்று ஒற்றுமை காண விழைந்தவர் பேயாழ்வார் என்றும் கருதப்படுகிறது.

தாழ் சடையும் நீள் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்,

சூழ் அரவும் பொன் நாணும்தோன்றுமால் — சூழும்

திரண்டு அருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு,

இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து.

பதினைந்து திவ்ய தேசங்களைப் பேயாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். திருக்கோவிலூரில் உள்ள ஒரு வைணவரின் வீட்டில் விளக்கு வெளிச்சத்தில் நாராயணன் நிற்பது முதலில் பேயாழ்வாருக்குத்தான் தெரிந்தது. பரமனைக் கண்ட பரவசத்தில் `திருக்கண்டேன். பொன்மேனி கண்டேன்’ என்று துவங்கி நூறு பாடல்களைப் பாடினார். மேலும் திருவேங்கடம் சென்ற இவர் பெருமானை சிவனும் விஷ்ணுவும் கலந்த உருவாகக் கண்டார்.

இவர் திருமாலிடம் ஆழ்ந்த அன்புடையவர். இவருடைய பக்தி வைராக்கியத்தால் இவர் செய்த செயல்கள் மற்றவர்களிடமிருந்து இவரைத் தனித்துக் காட்டின. தம்மை மறந்த நிலையில், பேய் பிடித்தவர் போல, கண்கள் சுழலும்படி விழுந்தார். சிரித்தார். தொழுதார். குதித்து ஆடினார். பாடினார். பெருமாளை விண்ணுலகத்தில் விட்டுவிட்டு, தான் மட்டும் பூலோகத்தில் இருந்ததால் ஏற்ப்பட்ட பிரிவாற்றாமை தாளாமல் அலறினார். இதனால் இவரைப் பேயாழ்வார் என்று குறிப்பிட்டு பக்தர்கள் கொண்டாடினர்.

பெருமாளின் 108 திருப்பதிகளில் பேயாழ்வார் மங்களாசாசனம் செய் துள்ள திருக்கோயில்கள்: வேளுக்கை, திருக்கடிகை, திருவல்லிக்கேணி, திரு விண்ணகரம், திருவெக்கா, திருப்பாடகம், திருக்கோஷ்டியூர், திருமாலிருஞ்சோலை, கும்பகோணம் மற்றும் திருவேங்கடம்.

அவரது பக்திக்கும், கற்பனை வளத்திற்கும் உதாரணமாக இரு பாசுரங்களைக் காணலாம். திருமால் தானே தனக்கு உவமையானவன் எல்லாத் தெய்வ உருவங்களிலும் வெளிப்படுபவனும், தவ உருவும், விண்ணில் மின்னும் விண்மீன்களும், தீயும், பெரிய மலைகளும், எட்டுத் திசைகளும், சூரியனும் சந்திரனும் ஆகிய இரு சுடர்களும் அவனே எனப் பாடுகிறார். தின்னும் வெத்திலையும் அவனே என்று சொல்வது ஆழ்வாரின் ஆழமான பக்தியைக் காட்டுகிறது.

திருமாலின் உந்தியில் உள்ள தாமரை அவர் கையில் ஏந்தியுள்ள சக்கரத்தைக் காலைக் கதிரவன் என்று கருதி மலர்கிறதாம். அவர் மற்றொரு கையில் ஏந்திய வெண் சங்கினைச் சந்திரன் எனக் கருதிக் குவிகிறதாம் என்று பாடியதை அவரது கற்பனா சக்திக்கு உதாரணமாகக் கூறலாம்.

சைவ வைணவ ஒற்றுமைக்கு வித்திட்ட பேயாழ்வார் புகழ் பாடிடுவோம்

Related posts