அறிவியல்

யானைகளின் முப்பாட்டன் – கம்பளி யானை !!!

மாமூத்துக்கள் (Mammoth) என்பன பூமியில் 4.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த எலபென்டியா என்ற உயிரியல் குடும்பத்தினை சேர்ந்த ஓர் உயிரினம் ஆகும். எலபென்டியா என்பது பிரோபாக்சிடியா என்ற உயிரியல் குடும்பத்தின் துணை குடும்பம் ஆகும். இந்த மாமூத்துகளுக்கும் தற்கால யானைகளுக்கும் நெருங்கிய படிவளர்ச்சித் தொடர்பு உள்ளது. மாமூத்துகளுக்கு தற்போதுள்ள பெரிய யானைகளை விட பெரிய தந்தங்கள் உண்டு மேலும் இதன் உடல் அடர்ந்த மயிர்களால் மூடப்பட்டும் காணப்பட்டது. தமிழில் இவைகளை கம்பளி யானைகள் என்று அழைப்பர்.

கம்பளி யானை என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியின் வடஅரைக் கோளத்தில் வாழ்ந்து வந்துள்ள பெரும் விலங்கு இனம். இவை இன்றைய யானைகளின் மூதாதையினராகக் கருதப்படுகின்றன. இவற்றின் உடல் முழுவதும் அடர்த்தியான உரோமங்களால் போர்த்தப்பட்டிருந்த காரணத்தால் இவை கம்பளி யானைகள் என அழைக்கப்பட்டன. ஆதிகால மனிதர்களால் வரையப்பட்ட குகை ஓவியங்களில் இவ்விலங்குகளின் உருவங்கள் வரையப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வினம் பூமியிலிருந்து முற்றாக அழிந்து மறைந்துவிட்டதாக அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.


வட அமெரிக்காவிலும் வடக்கு யூரேசியாப் பகுதியில் சைபீரியாவிலும் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகள், மற்றும் பனியில் உறைந்த எலும்புக்கூடுகள் ஆகியவற்றில் இருந்து இந்த விலங்குகள் பற்றி அறியவந்துள்ளது. குறைந்தது 150,000 ஆண்டு வயதான இவ்விலங்கு பற்றிய முதலாவது தரவு யூரேசியாவின் உறைபனிப் பரவலின் போது பெறப்பட்டது.

பெரும்பாலான கம்பளி யானைகள் புதிய பிளியசுடோசீன் காலத்திலும் பழைய கோலோசீன் காலத்திலும் அழிவைத் தழுவின. இந்த கம்பளி யானை மாமூத் என்னும் இனத்தைச் சேர்ந்தவை. மொத்த மாமூத் இனங்களின் வசிப்பிடம் 42,000 அண்டுகளுக்கு முன் 77 இலட்சம் சதுர கிலோமீட்டர்களில் இருந்து 8 இலட்சம் சதுர கிலோமீட்டர்களாக குறைந்தது. அதிலும் குறிப்பாக இந்த கம்பளி யானைகள் 12.5 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே பெருமளவு அழிவைத் தழுவியது. இதற்கு முக்கிய காரணம் கடைப் பனியூழிக் காலத்தில் நடந்த தட்பவெப்ப மாற்றங்களும் இதன் இனம் அக்கால மனித இனங்களால் வேட்டையாடப்பட்டதுமே ஆகும்.

சைபீரியாவின் துந்திரா பனிக்காட்டில் புதையுண்டிருந்த கம்பளி யானையொன்று 1999 ஒக்டோபர் மாதத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்டது. சுமார் 20,000 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்திருக்கலாம் எனக் கருதப்படும் இந்த ஆண் யானையின் சிதைவடையாத உடல் இரசியாவின் சைபீரியப் பகுதியில் உள்ள தைமூர் தீபகற்பத்திற்கு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்பகுதியில் மான்களை மேய்க்கச் சென்ற டொல்கன் இனத்தைச் சேர்ந்த ஜார்க்கொவ் என்ற பெயருடைய குடும்பத்தினர் 1997ல் இப்புதைகுழியை இனங்கண்டனர். இதனால் இந்தக் கம்பளி யானைக்கும் ஜார்க்கொவ் என்ற பெயர் இடப்பட்டுள்ளது.

பனிப் பாறையினுள் புதைந்திருந்த முழுமையான உடல் பனிக்கட்டிப் படையோடு சேர்த்துத் தோண்டியெடுக்கப்பட்டு உலங்குவானூர்தி மூலம் அண்மையிலுள்ள கட்டாங்கா என்ற நகருக்குத் தூக்கிச் செல்லப்பட்டது. சூழப்படிந்திருந்த பனிக்கட்டிப் படலத்தோடு சேர்ந்து அது 23 தொன் நிறையுடையதாக இருந்தது. முற்றாக உறைந்து போயுள்ள இந்த உடல் அதற்கென அமைக்கப்பட்ட குளிர் அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

இவ்விலங்கின் தந்தங்களையும், பற்களையும் ஆராய்ந்த அறிவியலாளர்கள் இது 11 அடி உயரமானது எனவும் தனது 47வது வயதில் இறந்துள்ளது எனவும் தீர்மானித்துள்ளனர். பனிப்பாறைக்கு வெளியே திறந்திருந்ததால் அதன் தலைப் பகுதி ஓரளவு சிதைந்து போயுள்ளது. ஏனைய பகுதிகள் எவ்வித குறைபாடும் இன்றி முழுமையாக இருந்தன. இதன் தந்தங்களை ஆராய்ந்த டச்சு அறிவியலாளரான டிக் மோல் என்பவர் இவ்விலங்கு நேற்று இறந்ததுபோல் வாட்டமுறாது இருக்கின்றது என கூறியுள்ளார். உரோமம் அடர்ந்த அதன் உடலைத் தடவும்போது உயிருள்ள மிருகமொன்றின் உடலை வருடிவிடுவது போன்ற உணர்வு ஏற்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Related posts