மங்கள் பாண்டே ஒரு இந்திய சிப்பாய் வீரர். 1857-ல் இந்தியாவில், முதல் சுதந்திர போராட்டப் போர் என்று சொல்லப்படும் சிப்பாய் கலகம் வெடிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் மங்கள் பாண்டே. அவர் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் 34 வது வங்காள காலாட்படைப் பிரிவில் ஒரு சிப்பாயாக இருந்தவர்.
மங்கள் பாண்டே, உத்தரபிரதேசத்தில் உள்ள நாக்வா என்ற கிராமத்தில் இந்து பிராமண குடும்பத்தில் பிறந்தார். 1849-ல் வங்காள இராணுவத்தில் சேர்ந்தார். 34வது வங்காள காலாட்படையின் தலைசிறந்த சிப்பாயாக இருந்தார். மார்ச் 1857-ல் ஆங்கிலேயருக்கு எதிராக கிளர்ச்சி வெடிப்பதற்கு முக்கிய காரணமாக கருதப்பட்டவர் மங்கள் பாண்டே. இதன் காரணமாக பிரிட்டிஷ் படையினர் மங்கள் பாண்டேவை தூக்கில் போட்டனர்.1984ல் இந்திய அரசு மங்கள் பாண்டேவின் புகழை நினைவுகூரும் வகையில் தபால் தலை வெளியிட்டு கௌரவப்படுத்தியது. டெல்லியைச் சேர்ந்த சி.ஆர். பக்ராஷி என்பவர் முத்திரை மற்றும் தபால் தலையை வடிவமைத்தார்.
மங்கள் பாண்டே தூக்கிலிடப்பட்ட இடத்தை நினைவுகூரும் வகையில் பாரக்பூரில் ‘ஷஹீத் மங்கள் பாண்டே மகா உத்யன்’ என்ற பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.‘மங்கள் பாண்டே: ஒரு எழுச்சி’ என்ற திரைப்படம் அமீர் கான் நடிப்பில் மங்கள் பாண்டேயின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு 2005-ல் வெளியானது. இப்படத்தில் காட்சிகள் அனைத்தும் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது என இயக்குநர் குறிப்பிட்டார். மங்கள் பாண்டே தனிப்பட்ட வாழ்க்கையில் தூய்மையானவர் மற்றும் பயமின்றி போர்க்களத்தில் சண்டை செய்தவர் எனவும் கூறினார். திரைப்படத்தைத் தவிர, மங்கள் பாண்டேவின் வாழ்க்கை ஒரு மேடை நாடகமாகவும் செதுக்கப்பட்டது.
இன்று மங்கள் பாண்டேவின் நினைவு தினம்.
உங்களுக்கு தெரிந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் யார்?