இந்தியாவில் வருடந்தோறும் சாலை விபத்துக்களால் உயிர் இழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. விபத்துக்களை குறைப்பதற்கும், பாதுகாப்பான பயணத்திற்கும் இந்திய அரசாங்கம் பல விதிமுறைகளை அறிமுகம் செய்துவந்தாலும் உயிர் இழப்பு குறைந்த பாடில்லை.இந்நிலையில், உயிர் பலியை குறைப்பதற்கு இருசக்கர வாகனங்களில் பயணிப்போருக்கு ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கி நீண்ட நாட்களாக செயல்படுத்தி வருகிறது அரசு. ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவரை, பின் அமர்ந்து செல்பவர்களை பிடித்து வழக்கு பதிவும் செய்தும் வருகின்றனர்.
சாலை விபத்துகளில் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படும் மாவட்டமாகக் கரூர் இருக்கிறது. இதை கவனித்த கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், இந்த உயிரிழப்புகள் அனைத்தும் தலைக்கவசம் அணியாமல் பயணம் செய்வதால் ஏற்படுகிறது. இது மிகவும் வருத்தமளிக்க கூடியதாக இருக்கிறது. ‘தலைக்கவசம் உயிர்க்கவசம்’ என்ற தொடரில் இருக்கும் ஆழமான அர்த்தத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், கரூரில் சில புதிய கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்துள்ளார்.கரூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் தலைக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கட்டாய தலைக்கவசம் அணிவது குறித்து எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் பற்றிய ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், பொதுத்துறை நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பெட்ரோல் பங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், ‘ஹெல்மெட் விழிப்புணர்வு குறித்து அனைத்து பகுதிகளிலும், நிறுவனங்களின் முகப்புகளில், சாலை சந்திப்புகளில் அறிவிப்புப் பலகை வைக்கப்படும். இச்செய்தி குறித்த போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெட்ரோல் பங்குகளில் தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது. மதுபான கடைகளில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் வருபவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் தலைக்கவசம் அணியாவிட்டால் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது.ஐஎஸ்ஐ முத்திரையுடன் கூடிய தலைக் கவசங்களை அணிய வேண்டும். மேலும், கரூர் மாவட்டத்தில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் தற்போது வரை தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகள் 75,534 நபர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டிருக்கிறது. இனிவரும் காலங்களில் இரு சக்கர வாகனம் ஓட்டும் அனைவரும் தலைக்கவசம் அணிந்து பயணம் செய்கிறார்கள் என்ற நிலையை உருவாக்க வேண்டும். வரும் 18 ம் தேதி முதல் கரூரின் அனைத்து பகுதிகளிலும் இத்திட்டம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும். இத்திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு அனைவரும் அளிக்க வேண்டும்’ என்று கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கூறியுள்ளார்.