ஆன்மீகம்

வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் – நம்மாழ்வார் !

திருநெல்வேலி சீமையில் தாமிரபரணி கரையிலுள்ள திருக்குருகூர் என்னும் ஊரில் பொற்காரியார் மற்றும் சேர நாட்டு திருவெண்பரிசாரத்தை ஆண்ட மன்னனின் மகளான உடைய நங்கைக்குத் திரு மகனாராக நம்மாழ்வார் கலி பிறந்த 43-ஆவது நாளில் அவதரித்தார். இவர் பாண்டிய மரபினர் ஆதலால் மாறன் என்ற இயற்பெயரையும் மாயையை உருவாக்கும் “சட” எனும் நாடியை விஷ்வக்சேனரின் அம்சமாகப் பிறந்த இவர் வென்றதால் “சடகோபன்” என்றும் மாறன் சடகோபன் என அழைக்கப்பட்டார். யானையை அடக்கும் அங்குசம் போலப் பரன் ஆகிய திருமாலைத் தன் அன்பினால் கட்டியமையால் “பராங்குசன்” என்றும், தலைவியாகத் தன்னை வரித்துக் கொண்டு பாடும்போது “பராங்குசநாயகி” என்றும் அழைக்கப்படுகிறார்.

ராமாநுஜர் உருவாக்கிய வைணவ பக்தி மற்றும் தத்துவ இயக்கம் வடநாடு சென்று, மாபெரும் பக்தி இயக்கமாக உருவெடுத்தது. நாமதேவர், சைதன்யர் என்று மகான்கள் பலர் தோன்றி, அவ்வியக்கத்தை வளர்த்தெடுத்தனர்.

இம்மாபெரும் எழுச்சிக்கு வித்திட்ட ராமாநுஜர், விசிஷ்டாத்வைதத்திற்கான தத்துவக் கூறுகளை, ஆழ்வார்களில் தலையாயவரான, நம்மாழ்வாரிடமிருந்தே பெற்றிருந்தார்.

வைணவ சமயத்தின் மூலமே நம்மாழ்வார் தான். எனவேதான் வைணவத்தில் அவருக்கு தனிச் சிறப்பு இருக்கின்றது. வைணவத்தில் கோயில் என்றாலே ஸ்ரீ ரங்கம் தான். ஆழ்வார் என்றாலே நம்மாழ்வார் தான். அவர் பெயரால் தான் திருக்குருகூருக்கு ‘ஆழ்வார்திருநகரி’ என்ற பெயர் வழங்கி வருகிறது. இந்தப் பெருமை நம்மாழ்வாருக்கு மட்டுமே உண்டு.

பொதுவாகப் பெருமாள் கோயில்களில் உள்ள திருவடிக்கு சடாரி எனப் பெயர். இது சடகோபன் என்ற நம்மாழ்வாரைக் குறிக்கும். ஆனால் நம்மாழ்வார் சந்நிதியில் உள்ள சடாரிக்கு ‘ராமாநுஜன்’ என்பது பெயர். இதை ராமாநுஜரே ஏற்படுத்தினார் என்பது வரலாறு. இதிலிருந்து நம்மாழ்வார் மீதான ராமாநுஜரின் அளப்பரிய பக்தி நமக்குப் புலப்படுகிறது.

பதினாறு ஆண்டுகள் திருக்குருகூர் நம்பி கோவிலின் புளிய மரத்தின் அடியில் எவ்வித சலனமும் இல்லாமல் தவம் செய்து வந்தார். வடதிசை யாத்திரை மேற்கொண்டிருந்த மதுரகவி என்பவர் அயோத்தியில் இருந்தபோது தெற்குத் திசையில் ஓர் ஒளி தெரிவதைக் கண்டு அதனை அடைய தென்திசை நோக்கிப் பயணித்தார். மாறனிடமிருந்தே அவ்வொளி வருவதை அறிந்து அவரைச் சிறு கல் கொண்டு எறிந்து விழிக்க வைத்தார். சடகோபனின் ஞானத்தாலும், பக்தியாலும் கவரப்பெற்று அவருக்கே அடிமை செய்தார் என்பது வரலாறு. மாறன் கண்விழித்த உடன் மதுரகவி ஆழ்வார் கேட்ட “செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?” கேள்விக்கு “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” என்று பதில் அளித்தார் நம்மாழ்வார். மதுரகவி ‘இவரே நம்மை ஆளவந்த குருநாதர்’ என்று கருதி ’தேவு மற்றறியேன்’ என்று ஆழ்வார் திருவடியைச் சேவித்து நின்றார்.

திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி இவற்றை ருக், யஜூர், சாமம், அதர்வணம் எனும் நால்வேதங்களின் சாரமாக அருளிச் செய்தார்.

மதுரகவிகளும் ஆழ்வார் திருவாக்குகளை கற்று ஊரும் நாடும் உலகும் அறிய வெளிப்படுத்தினார்.நம்மாழ்வார் மறைந்த பிறகு அவரது பூத உடலை திருப்புளியின் அடியில் பள்ளிப்படுத்தி (சமாதி செய்து) அவருக்கு விக்கிரகம் செய்து சந்நிதி உண்டாக்கி விழாக்கள் எடுத்து சிறப்பித்தார் மதுரகவிகள். நம்மாழ்வார் மொத்தம் 35 ஆண்டுகள் வாழ்ந்தார் என்பர்.

நம்மாழ்வார் 36 திவ்ய தேசங்களைப் பாடியுள்ளார். அவர் இருந்த திருப்புளியடியில் அம்மரத்தைச் சுற்றியுள்ள சுவரில் 36 திவ்ய தேச பெருமான்களின் திருவுருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

எல்லாத் திருக்கோயில்களிலும் வணங்கிய கைகளோடு இருக்கும் நம்மாழ்வார் ஆழ்வார் திருநகரியில் சின்முத்திரையோடு ஞான உபதேசம் பண்ணும் திருக்கோலத்தில் வீற்றிருக்கின்றார். நவதிருப்பதிகளிலும் நம்மாழ்வாருக்கு தனிச் சந்நிதி கிடையாது” என்பது கூடுதல் தகவல்.

Related posts