தமிழ் சினிமாவில் தொடர்ந்து நல்ல கதை அம்சம் உடைய படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் சூர்யா. அவர் அடுத்தடுத்து பணிபுரிய இருக்கும் இயக்குனர்கள் பற்றிய செய்திகள் வெளியாகி ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை அதிகரிக்கசெய்துள்ளது.கொரோனா சூழலிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து, ஓடிடியில் ரிலீஸ் செய்து, சர்வதேச கவனத்திற்குள் வந்தவர் சூர்யா. தற்போது எதற்கும் துணிந்தவன் படம் வெளியானதை அடுத்து பாலா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்து வருகிறது.
படத்தை மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் என டைரக்டர் பாலாவிடம் சூர்யா கேட்டுள்ளார். இதனால் படப்பிடிப்பை விரைவாக முடிக்க விறுவிறுப்பாக ஷுட்டிங் நடைபெற்றுவருகிறது. இப்படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார் சூர்யா. இந்த படத்தின் டெஸ்ட் ஷுட் சமீபத்தில் ஈசிஆரில் அமைக்கப்பட்டுள்ள செட்டில் நடத்தப்பட்டது. படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக பல ஜல்லிக்கட்டு காளைகளுக்கு அங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
வாடிவாசல் படம் முடிந்தவுடன், சிறுத்தை சிவா அல்லது பாண்டியராஜ் இயக்கும் படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக செய்திகள் வந்தன. ஆனால், சூர்யாவை வைத்து மற்றொரு படத்தை இயக்க டைரக்டர் சுதா கொங்கரா திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. சூரரைப் போற்று படத்திற்கு பிறகு, மீண்டும் சூர்யா-சுதா கொங்கரா இணைவது உறுதியாகி விட்டதாக சுதா கொங்கரா சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
சேனல் ஒன்றிற்கு சுதா கொங்கரா அளித்த பேட்டியில், சூர்யாவை வைத்து மற்றொரு படத்தை இயக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. சூர்யாவின் கால்ஷிட் கிடைக்கும் பட்சத்தில் இந்த படம் சாத்தியமாகும். இந்த படமும் உண்மை சம்பவத்தை தழுவிய ஒரு கதையாக இருக்கும். கதை உண்மை சம்பவத்தின் அடிப்படையிலானதா அல்லது பயோபிக்கா என இன்னும் முடிவு செய்யவில்லை என்றார்.
சூர்யா கடைசியாக நடித்து வெளிவரும் படங்கள் உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவானதாகவே இருக்கிறது. சூரரைப் போற்று படம் கேப்டன் கோபிநாத்தின் பயோபிக், ஜெய்பீம் கடலூரில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. எதற்கும் துணிந்தவன் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை ஒட்டி கமர்சியலாக எடுக்கப்பட்டது. வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படம், வாடிவாசல் நாவலை மையமாகக் வைத்து நடக்கும் கதை.