வணிகம்

யானை தந்தம் – இயற்கைக்கு எதிராக ஒரு வணிகம் !

யானை, பெயரில் மட்டும் பிரமாண்டம் இல்லை. அதை அடிப்படையாக வைத்து உலகில் நடக்கும் கடத்தலும் வியாபாரமும் கூட மிகப்பெரியவைதான். உணவுக்காக மட்டுமே ஓர் உயிரினம் மற்றொரு உயிரினத்தைக் கொல்லும். ஆனால், மனித இனம் மட்டுமே, பணத்துக்காகவும் மற்ற உயிரினங்களைக் கொல்கிறது. இதில், அதிகம் பாதிக்கப்படுவது யானைகள். `யானை இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்ற வாசகம் பள்ளிகளில் இன்றைக்கும் சொல்லித் தரப்படுகிறது. ஓர் உதாரணத்துக்காகச் சொல்லப்படும் அந்த வாக்கியத்துக்குப் பின்னால் உள்ள அரசியல் மிகக்கொடூரமானது.

உலகளவில் அதிகம் கடத்தப்படும் சட்ட விரோதப் பொருள்களில் போதைப்பொருள் முதலிடத்தில் இருக்கிறது. ஆயுதக் கடத்தல் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. மூன்றாம் இடத்தில் இருப்பவை யானைத் தந்தங்கள். கடத்தல்காரர்களைப் பொறுத்தவரை, யானைத் தந்தம் என்கிற பெயரே ஒரு போதைப் பொருள்தான். இதற்காக ஆண்டுக்கு 25,000 முதல் 50,000 யானைகள் கொல்லப்படுகின்றன. உலகம் முழுவதும் வன உயிரினங்கள் தொடர்பான சட்ட விரோதமான வர்த்தகம் சுமார் 19 பில்லியன் டாலர் அளவுக்கு நடைபெறுகின்றன.

ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் யானைகள் கொல்லப்படுவது சர்வ சாதாரணம். தந்தங்கள், தோல், பற்கள், ரோமம், நகங்கள் எனப் பல காரணங்களுக்காக வேட்டையாடப்படும் யானைகளைக் காக்கப் பலரும் போராடி வருகிறார்கள். ஆப்பிரிக்காவில் ஆண் யானைகளுக்குத் தந்தங்கள் பெரிதாக இருக்கும் என்பதால், கடந்த காலங்களில் அவையே அதிகம் வேட்டையாடப்பட்டன. இதனால், ஆண் – பெண் யானைகளுக்கான பாலின விகிதம் குறைந்தது. மேலும், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆராய்ச்சி முடிவு, ஆப்பிரிக்காவில் சமீபகாலங்களில் பிறக்கும் யானைக் குட்டிகள் 6% வரை தந்தங்கள் இல்லாமல் பிறப்பதாகச் சொல்கிறது. யானைகளுக்கு எதிராக மனிதர்கள் நடத்திய தாக்குதலின் விளைவாக இயற்கையாக விளைந்த ஒரு `பரிணாம வளர்ச்சி’ என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். மனிதர்களின் வேட்டையிலிருந்து தப்பிக்க யானைகள் தந்தங்கள் இல்லாமல் பிறக்கின்றன.

உலகச் சந்தையில் யானைத் தந்தத்துக்கும், தந்தத்தால் செய்யப்பட்ட பொருள்களுக்கும் மிகுந்த மதிப்பு உண்டு. பில்லியர்ட்ஸ் பந்துகள், பியானோ விசைகள் (Piano Keys) செய்வதற்குக்கூடத் தந்தங்கள் தேவைப்படுகின்றன. யானைகளின் தோலுக்கும், முடிக்கும் கூட நல்ல மதிப்பு உண்டு. இவற்றுக்காகவும், பாரம்பர்ய மருத்துவப் பொருள்களுக்காகவும் யானைகள் வேட்டையாடப்படுகின்றன. பெரும்பாலான விலங்குகளின் அழிவுக்கும் காரணமாய் இருக்கிற சீன அரசு யானை அழிவுக்கும் காரணமாகவே இருக்கிறது.

ஆனால், தற்போது யானைகள் அழிவில் அக்கறை கொண்ட சீன அரசு, 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி தந்தங்கள் விற்பனை செய்வதை அதிகாரபூர்வமாகத் தடை செய்திருக்கிறது.


தந்த வேட்டை என்பது பகட்டுக்கானது. `என்னிடம் தந்தத்தில் சீப் உள்ளது’ என்பதை சிலர் பெருமையாக கருதுகின்றனர். கீழடி அகழாய்வில் தந்தத்தால் ஆன பொருள்கள் கிடைத்துள்ளன. அன்றைய காலகட்டத்தில் போர்க்களத்தில் இறந்த யானைகளின் தந்தங்களை அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம். இப்போதெல்லாம் யானைகள் இறந்து பல ஆண்டுகள் கழித்துத்தான் தகவல் வெளியில் வருகிறது.

1986-ம் வருடம் தந்தங்கள் மற்றும் தந்தங்களிலான பொருள்களை வியாபாரம் செய்வதை இந்திய அரசு தடைசெய்தது. ஆனாலும் கள்ளச்சந்தையில் அவை நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.


யானை என்கிற பெயருக்குப் பின்னால் இருக்கும் அரசியலும் அதற்காக நிகழ்த்தப்பட்ட படுகொலைகளும் பல அத்தியாயங்களைக் கடக்கும். தந்தங்களுக்காகக் கொல்லப்பட்ட யானைகளைப் போலக் கொல்லப்பட்ட மனிதர்களும் அநேகம்.மனிதனின் தேவையற்ற ஆடம்பரமும் பகட்டு வாழ்க்கை முறையும் இயற்கையை அழித்துவிடுவதோடு மனித இனத்தையே அழித்துவிடும் என்பதற்கு யானை தந்த வர்த்தகம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

 

Related posts