ஆன்மீகம்

குருபக்திக்கு அடையாளமாக வாழ்ந்த கூரத்தாழ்வார்.. கண்களை பிடுங்கிக் கொடுத்த காட்சி!

காஞ்சிபுரம் அருகே கூரம் என்னும் கிராமத்தில் பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த கூரத்தாழ்வாரின் இயற்பெயர் திருமறுமார்பினன். ராமானுஞ்சரின் பிரதான சீடரான இவர் காஞ்சி வரதராஜப்பெருமாள் மீது அளவிலா பற்றுக் கொண்டவர். தனது செல்வத்தை ஏழை எளியோர்க்கு வழங்குவதில் பேரின்பம் அடைந்தார். ஒவ்வொரு நாளும் காஞ்சி வரதராஜப்பெருமாள் கோயில் திருக்கதவுகள் மூடியபின் தான் இவரது வீட்டின் கதவுகள் மூடப்படும். ஆனால், ஒரு நாள் ஊர் திருவிழாவிற்கு செல்ல வேண்டியிருந்ததால் வழக்கத்தைவிட, சற்று முன்பாகவே வீட்டுக்கதவை மூடி இருக்கிறார்.

கதவை சாத்தும்போது, கதவில் கட்டப்பட்டிருந்த விலை உயர்ந்த மணிகளின் ஒலி வரதராஜப்பெருமாள் சன்னதி வரை கேட்கவும், பெருந் தேவித்தாயார், சுவாமியிடம் “என்ன! அதற்குள் கோயில் அடைக்கும் சத்தம். நடை சாத்த நேரமாகிவிட்டதா?” என்று வினவினாள்.

சுவாமிக்கும் ஒன்றும் புரியாமல் போகவே, தனக்கு ஆலவட்ட கைங்கர்யம் செய்து வந்த திருக்கச்சி நம்பிகளிடம் இதைப் பற்றிக் கேட்க, அவரும் நடந்ததைச் சொன்னார். அதைக் கேட்ட பெருமாள், “ஆழ்வானின் செல்வத்திற்கு அத்தனை சிறப்பா? கோயில் கதவு மூடும் முன்னே அவன் வீட்டுக்கதவு மூடப்பட்டதே!” என்றார். உத்தம ஆத்மாவான கூரத்தாழ்வாரை தான் காணவிரும்புவதாய் கூறினாள்.

இதை அறிந்த கூரத்தாழ்வார் “நான் நாயினும் கடையேன். எனக்குத் தாயாரை தரிசிக்கும் பாக்கியமும் இல்லை, தகுதியும் இல்லை. என் வீட்டுக் கதவுகளை அப்படிச் சத்தம் வருவது போல் சாத்தி, என் செல்வத் திமிரைக் காட்டி விட்டேனோ?” என வருந்தினார்.

மேலும், தனது எல்லாச் செல்வங்களையும் தானம் செய்ய ஆரம்பித்தார். செல்வச்செருக்கு, குலச்செருக்கு, கல்விச்செருக்கு என மூன்றையும் அறுத்தவர் என்பதால், முக்குறும்பை அறுத்தவர் எனப்பெயர்பெற்றார். கல்வியுடன் நற்பண்புகள் கொண்ட ஆண்டாள் என்ற பெயர் கொண்ட ஒரு நல்ல குணவதியை தன் இல்வாழ்க்கை துணையாக்கிக் கொண்டார். தன் செல்வத்தை எல்லாம் தானம் செய்த பின்னர் தன் குருவான ஸ்ரீ ராமானுஜர் பொற்பாதங்களை சரணடைந்தார்.

தீவிர சைவ பக்தனான குலோத்துங்க சோழன் வைணவத்தை அறவே வெறுத்தான். வைணவ மதத்திற்கு தலைவராக இருக்கும் ராமானுஜரை அழைத்து, சிவமே சிறந்தது என்று கையெழுத்து வாங்க நினைத்தார். கூரத்தாழ்வானின், சிஷ்யனாக இருந்த நாலூரான் தான் குலோத்துங்க சோழனுக்கு இதை கூறியுள்ளான். அரசனும் சேவகர்களை அனுப்பி, ராமானுஜரை அழைத்துவரப் பணித்தார்.

இதனைக் கேள்வியுற்ற கூரத்தாழ்வான், எம்பெருமானார் அரசனிடம் சென்றால், அவருக்கு தீங்கு ஏற்படும் என்று அஞ்சி குருவை காப்பாற்ற வேண்டியது சிஷ்யனின் கடமை என்று அவரே ராமானுஜர் வேடத்தில் அரசனை சந்திக்க சென்றார். அரசன் கூரத்தாழ்வானின் கண்களை பிடுங்க உத்தரவு இட, ஆழ்வானோ அதற்கு சற்றும் இடம் கொடுக்காமல் தன் கண்களை தானே பிடுங்கிக் கொண்டார்.

சுமார் 12 வருட காலம் கழித்து ராமானுஜரும், கூரத்தாழ்வாரும் காஞ்சியில் சந்தித்தனர். அப்போது ராமானுஜர் காஞ்சிப் பேரருளாளனிடம் வேண்டிக் கொண்டதால், கூரத்தாழ்வார் இழந்த பார்வையை மீண்டும் பெற்றார். இதிலிருந்து குருவின் மேல் ஆழ்வானுக்கு இருந்த ஒப்பற்ற குருபக்தி உலகிற்கு தெளிவாயிற்று.

ஒருநாள் திருவரங்கனின் திரு முன்பு ஆழ்வார் சென்று, ”பொன்னி சூழ் அரங்கமேய பூவை வண்ண மாய, கேள்!’ என்னும் திருமழிசைபிரானின் பாசுரத்தை உருக்கத்துடன் பாடி, “அடியேனுக்கு உன் திருவடி ஏகும் பேற்றினைக்கொடு” என்ற வேண்டுகோளை வைத்தார். எம்பெருமானும் அகம் மகிழ்ந்து “பரமபதம் தந்தோம்” என்று அருளினார்.

இதனால் ராமானுஜர் பதற்றம் அடைந்தவராக தன் சீடனிடம், “கூரேசா நீ ஏன் முந்திக்கொண்டாய்?’ என்று கேட்க அதற்கு கூரேசர், “எம் குருவான உம்மை எதிர்கொண்டழைக்க நான் முன்னே செல்லவேண்டாமா?’ என்று சொல்லவும், ராமானுஜர் மனம் நெகிழ்ந்தார்.

கூரத்தாழ்வார் ராமானுஜரிடம் கொண்டிருந்த குருபக்தி, நாம் அனைவரும் பின்பற்றக்தக்கது.

Related posts