ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் நேற்றிரவு நடந்த 21-வது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வுசெய்தார்.
குஜராத் பேட்டிங்
குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக மேத்யூ வேட் மற்றும் ஷுப்மன் கில் களமிறங்கினர். அணிக்கு வலுவான தொடக்கம் கொடுக்க முயற்சித்த இந்த ஜோடியில் ஷுப்மன் கில் 7 ரன்னில் ஆட்டமிழந்து குஜராத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். தொடர்ந்து வந்த சாய் சுதர்சன் 11 ரன்னில் நடையை கட்டினார். பின்னர் வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் ரேட் வீதத்தை குறையாமல் பார்த்துக் கொண்டார்.
மறுமுனையில் விளையாடிய தொடக்க வீரர் மேத்யூ வேட் 19 ரன்னிலும், டேவிட் மில்லர் 12 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். பின்பு களம் இறங்கிய அறிமுக வீரரான அபினவ் மனோகர் 21 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்ஸர் பறக்கவிட்டு 35 ரன்கள் சேர்ந்திருந்த நிலையில் அவுட் ஆனார். குஜராத் அணியை கரை சேர்க்க வேண்டும் என்ற பொறுப்புடன் களத்தில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா 42 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 1 சிக்ஸர் அடித்து அரைசதம் விளாசினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் சேர்த்தது. ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக நடராஜன் மற்றும் புவனேஷ்வர் குமார் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்ற வில்லியம்சன்
163 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு துரத்திய சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு தொடக்க வீரர்களான அபிஷேக் சர்மா மற்றும் கேப்டன் கேன் வில்லியம்சன் ஜோடி வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.
அதிரடியாக விளையாடி வந்த அபிஷேக் சர்மா 6 பவுண்டரிகளை விளாசி 42 ரன்கள் சேர்ந்திருந்த நிலையில் ரஷித் கானிடம் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த ராகுல் திரிபாதியுடன் இணைந்து கேப்டன் வில்லியம்சன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ராகுல் திரிபாதி காயம் காரணமாக ரிட்டர்ன் கட் ஆகி ஓய்வெடுக்க சென்றார். இதன் காரணமாக நிக்கோலஸ் பூரான் களம் கண்டார். நிலைத்து நின்று விளையாடிய வில்லியம்சன் அரை சதம் விளாசி ஹர்திக் பாண்டியாவிடம் தன் விக்கெட்டை பறிகொடுத்தார்.
பின்பு ஜோடி சேர்ந்த பூரான் மற்றும் மார்க்ரம் அணியை வெற்றிக் கனியை சுவைக்க வைத்தனர். குஜராத் அணியில் அதிகபட்சமாக ஹர்திக் மற்றும் ரஷித் கான் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு காரணமான வில்லியம்சன் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.