நேற்று மதியம் மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா, டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி டெல்லியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது.
அதிரடி காட்டிய டெல்லி
டெல்லி அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக பிருத்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் களம் இறங்கினர். துவக்கத்திலயே அதிரடி காட்டிய பிருத்வி ஷா, உமேஷ் யாதவ் வீசிய முதல் ஓவரிலையே 2 பவுண்டரிகளை அடித்து தூள் கிளப்பினார். அடுத்தடுத்த ஓவர்களில் இந்த ஜோடி பவுண்டரி பவுண்டரிகளாக அடித்துத்தள்ளினர். 4 வது ஓவரை வீசிய பேட் கம்மின்ஸ் 16 ரன்களை வாரி வழங்க, பவர் ப்ளே முடிவில் இந்த ஜோடி 68 ரன்களை குவித்தது.
அதிரடியாக ஆடிய பிருத்வி ஷா 27 பந்தில் 7 பவுண்டரி 2 சிக்ஸருடன் அரைசதம் கடந்த நிலையில் வருண் சக்கரவர்த்தியிடம் போல்டானார். அடுத்து களம் இறங்கிய டெல்லி அணியின் கேப்டன் பண்ட் ரன் ரேட்டின் வேகத்தை அதிகரிக்கும் போது 27 ரன்னில் ரஸலின் ஷாட் பந்திற்கு தன் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். அடுத்தடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் இக்கட்டான நிலையில் சோபிக்கத் தவறினர்.
மறுமுனையில் தனித்து நின்று நிலையாக விளையாடிய வார்னர் 64 ரன்கள் எடுத்து உமேஷிடம் தன் விக்கெட்டை இழந்தார். இறுதியில் டெல்லி அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 215 குவித்தது. இந்த சீசனில் அதிகபட்சமாக ஒரு அணி அடித்த ஸ்கோர் இதுவாகும். கொல்கத்தா அணியின் சார்பாக நரைன் 2 விக்கெட்டை வீழ்த்தினார்.
போராடித் தோற்ற கொல்கத்தா
நிர்ணயிக்கப்பட்ட 215 ரன்களை எட்டும் முனைப்பில் கொல்கத்தா அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ரஹேனா மற்றும் வெங்கடேஷ் ஐயர் களம் இறங்கினர். முஸ்தஃபிர் வீசிய முதல் ஓவரில் முதல் இரு பந்தில் அடுத்தடுத்த அவுட்டாகி ரிவியூவில் தப்பித்த ரஹானே, மூன்றாவது பந்தில் ஆன உண்மையான அவுட்டிற்கு டெல்லி வீரர்கள் அப்பீல் செய்யாததால் ரஹானே தப்பினார்.
கலீல் வீசிய 3 வது ஓவரில் சிக்ஸர் அடிக்க முயன்ற வெங்கடேஷ் ஐயர் அக்சர் பட்டேலிடம் கேச்சாகி அதிர்ச்சி அளித்தார். 7 ஓவர்கள் முடிவில் தன் துவக்க ஆட்டக்கார்களான ரஹானே மற்றும் வெங்கடேஷ் ஐயரை இழந்த கொல்கத்தா அணி 51 ரன்களை எடுத்திருந்தது. களத்தில் ஸ்ரேயஸ் ஐய்யரும், நிதிஷ் ராணாவும் இருந்தனர். நிதிஷ் ராணாவோ 20 பந்துகளில் 3 சிக்ஸருடன் 30 ரன்களுக்கு நடையைக் கட்ட, கேப்டன் ஸ்ரேயஸ் ஐயருக்கு சுமை அதிகமாகியது. ஸ்ரேயஸ் ஐயர் அதிரடியாக ஆடி 32 பந்துகளில் அரைசதம் விளாசினார். கேப்டன் ஸ்ரேயஸ் ஆட்டமிழந்த பிறகு அடுத்தடுத்து பாட் கம்மின்ஸ், சுனில் நரைனை குல்தீப் யாதவ் தனது சுழலால் அவுட்டாக்கினார்.
171 ரன்கள் எடுத்த கொல்கத்தா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. டெல்லி அணியின் சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இன்று நடக்கும் போட்டியில் ஹைதராபாத் மற்றும் இதுவரை நடந்த போட்டிகளில் தோல்வியையே சந்திக்காத குஜராத் அணியும் மோதுகிறது.