விளையாட்டு

கடைசி ஓவர் வரை சென்ற விறுவிறுப்பான போட்டி.. ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி!

நேற்று இரவு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இளம் வீரர்களை கொண்ட லக்னோ அணியும் – ராஜஸ்தான் அணியும் மோதின.  டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் வழக்கம்போல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ராஜஸ்தான் பேட்டிங்

அதிரடியான பேஸ்ட்மேன்களை கொண்ட ராஜஸ்தான் அணிக்கு சூப்பரான துவக்கத்தை தர பட்லரும், படிக்கலும் களம் இறங்கினர். சமீரா வீசிய முதல் ஓவரிலையே படிக்கலின் கேட்சை ஹோல்டர் நழுவ விட பிஷ்னாய் வீசிய 4 வது ஓவரில் படிக்கல் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசினார். அதே ஓவரின் இறுதி பந்தில் படிக்கல்லின் கேட்சை மீண்டும் நழுவ விட்டனர் லக்னோ அணியினர். பின்பு ரன் வேட்டையை தொடங்கிய பட்லர் மற்றும் படிக்கல், லக்னோவில் பந்துவீச்சை சிதறடித்தனர்.

இந்த சீசனில் அதிக ரன் அடித்தவரான பட்லர் ஆவேஸ் கானிடம் போல்டாகி அதிர்ச்சி அளித்தார். பவர் ப்ளே முடிவில் ராஜஸ்தான் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 44 ரன்களை எடுத்திருந்தது. கேப்டன் சாம்சனும் படிக்கலும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்தனர். ஆனால், ஹோல்டர் சாம்சனை 13 ரன்னிற்கு வெளியேற்றியதன் மூலம் அந்த நம்பிக்கையும் தகர்ந்தது. பின்பு மடமடவென 3 விக்கெட்டை இழந்த ராஜஸ்தான் தத்தளித்தது.

இந்த இக்கட்டான நிலையில் ஜோடி சேர்ந்த ஹெட்மெயரும் அஸ்வினும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை ராஜஸ்தான் அணி எடுத்தது. இறுதி வரை போராடிய ஹெட்மெயர் 59 ரன்களை குவித்து அணியின் ஸ்கோர் உயர்வதற்கு அச்சாணியாக விளங்கினார். லக்னோ அணியில் கௌதம் மற்றும் ஹோல்டர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.

லக்னோவின் மோசமான தொடக்கம்

ராஜஸ்தான் அணி நிர்ணயித்த 166 ரன்களை எட்டும் முனைப்பில் லக்னோ அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ராகுல் மற்றும் டி காக் களம் இறங்கினர். லக்னோ அணியின் தொடக்கம் படுமோசமாக அமைந்தது. முதல் ஓவரிலயே ராகுல் மற்றும் கௌதமை வெளியேற்றி போல்ட் தன் அபாரமான பந்துவீச்சில் லக்னோ பேட்ஸ்மேன்களை திக்குமுக்காட வைத்தார்.

இளம் வீரர்களான கிருஷ்ணா மற்றும் சென் கட்டுக்கோப்பான பந்து வீச்சில் லக்னோ பேட்ஸ்மேன்களை திண்டாட வைத்தனர். நிதானமாக விளையாடிய டி காக் 39 ரன்னில் சஹாலிடம் தன் விக்கெட்டை இழந்தார். ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் லக்னோ அணி திணறியது. பின்பு இணைந்த ஷுடா மற்றும் குர்னால் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இறுதியில் 2 ஓவர்களில் 34 தேவை என்ற இக்கட்டான நிலைக்கு லக்னோ சென்றது. கிருஷ்ணா வீசிய 19 வது ஓவரில் 19 ரன்களை ஸ்டாய்னஸ் விளாச ஆட்டம் விறுவிறுப்பாக மாறியது. 6 பந்துகளுக்கு 15 ரன்கள் வேண்டும் என்ற நிலையில் இறுதி ஓவரை அறிமுக வீரரான சென் வீசினார்.

தன் நுனுக்கமான பந்துவீச்சில் 4 பந்துகளை டாட் பந்துகளாக மாற்றி ராஜஸ்தான் அணிக்கு வெற்றி வாகையை சூடித்தந்தார் சென். ராஜஸ்தான் அணி சார்பில் சஹால் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இன்று நடக்கும் போட்டியில் ஹைதராபாத் மற்றும் இதுவரை நடந்த போட்டிகளில் தோல்வியை சந்திக்காத குஜராத் அணியும் மோதுகிறது.

Related posts