பயணம்

ஐ!!!ரோப்பா- ஜெர்மனியின் செந்தேன் மலரே! – பாகம் 1

ஐரோப்பிய யூனியனின் பொருளாதார மையமாக இருக்கும் ஜெர்மனி நாடு, அந்த கண்டத்தின் மிக அழகிய நாடாகவும், அதிக சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நாடாகவும் திகழ்கிறது. வாழ்நாளில் மறக்க முடியாத சுற்றுலா பயண அனுபவத்தை பெற வேண்டுமானால் அதற்கு சிறந்த தேர்வு ஜெர்மனி தான்.

ஜெர்மனி நாட்டின் குறுக்கே ஓடும் எண்ணற்ற தொடர்வண்டிகளும், எல்லா நகரங்களையும் இணைக்கும் சாலை வசதிகளும், சுற்றுலா பயணிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது என்றே கூறலாம்.ஒரு சில மணி நேரங்களில் ஜெர்மனி நாட்டின் ஒரு முனையிலிருந்து மற்றோரு முனைக்கு சென்று சேர்ந்து விடலாம்.

நாட்டின் தலைநகரான பெர்லினை பார்க்க விரும்பினாலும் சரி,அல்லது புராதன நகரமான முனிக்கை (Munich ) காண விரும்பினாலும் சரி, எல்லாவற்றயும் சுற்றிப்பார்க்க ஒரு சில நாட்களே போதுமானது.

பெர்லின் : 

ஐரோப்பிய கண்டத்திலேயே மிகவும் உயிரோட்டமுள்ள நகரம் என்று பெர்லின் நகரை சொல்லலாம். எப்பொழுதும் பரப்பரப்பாகவே இயங்கிக்கொண்டிருக்கும் இந்த பெர்லின் நகரில் சுற்றி பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன.இங்குள்ள வணிக வளாகங்களை உணவகங்களும் ஆண்டு தோறும் பல லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து குவிவதற்கு காரணங்களாக அமைகின்றன.

ஐரோப்பாவின் கலாச்சார தலைநகரமாக பெர்லின் நகரை கூறலாம். ஐரோப்பிய நாடுகளின் கலாச்சாரங்களை தனக்குள் அடக்கி வைத்திருக்கிறது பெர்லின். நிறைய அருங்காதியாகங்களும், கலைக்கூடங்களும் நிறைந்திருக்கும் பெர்லின் நகரம், ஐரோப்பிய கண்டத்தின் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் உலகிற்கு எடுத்துச்சொல்லும் இடமாக விளங்குகிறது.வரலாற்று சிறப்புமிக்க பெர்லின் சுவர் இருந்ததும் இந்த நகரத்தில் தான். இங்கு மியூசியம் ஐலண்ட் (Museum Island ) என்று தனியே ஒரு சிறு பகுதியும் உள்ளது. நிறைய அருங்காட்சியகங்கள் இங்கே அமைக்கப்பட்டிருப்பதை காணலாம் .

உலகபுகழ்வாய்ந்த பெர்லின் சிம்பொனி இசைக்குழுவின் அசத்தலான இசை கச்சேரிகள் நாள்தோறும் இரவு இங்கே நிகழ்த்தப்படுகிறது.பெர்லின் நகரின் இரவு வாழ்க்கை குடியும் கும்மாளமுமாக இருக்கும். வாழ்வின் சோகங்களை மறந்து ஒரு இரவு முழுவதும் இன்ப வெள்ளத்தில் மூழ்கி கிடைக்க எண்ணற்ற பயணிகள் இங்கே வருவதுண்டு. இவைபோக இங்கே எண்ணற்ற சிறிய பூங்காக்களும் உள்ளன. இயற்கை ஆர்வலர்களும், தனிமை விரும்பிகளும் இந்த பூங்காக்களில் தாராளமாக தங்கள் பொழுதை கழிக்கலாம்.

முனிக் :

ஆல்ப்ஸ் மழையின் ஓரத்தில் அமைந்திருக்கும் அழகிய நகரம் தான் முனிக். சரித்திர புகழ்வாய்ந்த இந்த முனிக் நகரத்தில் பத்தாம் நூற்றாண்டு முதலே எண்ணற்ற வெளிநாட்டவர் வந்து வசிக்கத்தொடங்கினர். ஜெர்மனி நாட்டின் கலாச்சாரம் மற்றும் அரசியல் முன்னேற்றத்திற்கு இந்த முனிக் நகரம் பெரும் பங்கை அளித்திருக்கிறது. காலப்போக்கில் ஜெர்மனியின் மத அடையாளத்தை பறைசாற்றும் நகரமாக முனிக் மாறிப்போனது. இன்றும் இந்த நகரில் பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட எண்ணற்ற தேவாலயங்களும், மதகுருமார்கள் தங்கும் மடங்களும் உள்ளன.

முனிக் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள City Centre காண வேண்டிய ஒரு இடமாகும். Marienplatz என்றழைக்கப்படும் பெரிய பூங்காவும் இந்த இடத்தில் உள்ளது. பண்டையகால கட்டிடங்களும், சிற்பங்களும் இங்கு காண கிடைக்கின்றன. இவை இந்த முனிக் நகருக்கு மேலும் அழகை கூட்டுகின்றன.

முனிக் நகரின் குறுக்கே ஓடும் ஈஸார் (Isar ) நதியின் கரையோரங்களில் உள்ள தெருக்களை காண கண் கோடி வேண்டும். English Garden என்ற அழகிய பூங்காவும் இந்த நதியின் ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

ரோதென்பர்க்:

பழமை மாறாமல் பாதுகாக்கப்பட்டு வரும் ரோதென்பர்க் நகரம். ஜெர்மனியின் அழகுக்கு ஒரு அடையாள சின்னம் என்றே கூறலாம். இந்த நகரின் எந்த பகுதியை நீங்கள் புகைப்படம் எடுத்தாலும் அது பார்ப்பதற்கு ஓவியம் போல் தெரியும். அந்த லாவுக்கு இயற்கை எழில் கொஞ்சும் அழகிய நகரமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது இந்த ரோதென்பர்க் நகரம்.

இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருந்த நேரம். ஜெர்மனியின் பல நகரங்கள் குண்டுவீச்சால் பாதிக்கப்பட்டன. எத்தனையோ சரித்திர புகழ்வாய்ந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. ஆனால் அந்த சூழ்நிலையிலும் எந்த பாதிப்பும் இன்றி தன அழகை தக்கவைத்துக்கொண்ட ஒரு அதிர்ஷ்ட நகரம் தான் இந்த ரோதென்பர்க்.

டவுபேர் நதியின் கரையில் அமைந்திருக்கும் ரோதென்பர்க் , ஜெர்மனியில் உள்ள மிக பழமையான கட்டிடங்களின் கிடங்கு என்று சொல்லலாம். இங்கு உள்ள அனைத்து கட்டிடங்களும் குறைந்தது இரண்டு நூற்றாண்டுகள் பழமை வாய்ந்ததாக உள்ளது.

Imperial City Museum என்ற அருங்காட்சியகமும் இங்கே உள்ளது. பதிமூன்றாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட Town Hall கட்டிடம் , பனடய ஜெர்மனியின் கட்டிடக்கலைக்கு ஒரு எடுத்துக்காட்டு. பதினேழாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட Castle Gardens எனப்படும் தோட்டம் இன்றளவும் அழகு குறையாமல் காட்சியளிக்கிறது.

கோலோன் (Cologne) :

நவீன ஜெர்மனியின் அடையாளமாக விளங்கும் நகரம் தான் கோலோன். இங்கே பழமையும் புதுமையும் ஒருசேர கலந்து புதுவித அழகை வெளிப்படுத்துகிறது. பண்டைய ரோமாபுரி மக்களால் உருவாக்கப்பட்ட இந்த நகரம், பல நூற்றாண்டுகளாக வழிப்பாட்டு தலமாக கருதப்பட்டு வந்தது. மொத்தம் பன்னிரண்டு தேவாலயங்கள் இங்கு உள்ளன. அனைத்தும் பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தேவாலயங்கள். அவற்றுள் மிகவும் சிறப்பு வாய்ந்தது Cologne Cathedral எனப்படும் தேவாலயம் தான். இந்த தேவாலயத்தை சுற்றி இன்று சிறு சிறு உணவகங்கள், கடைகள் என்று மைண்க்கப்பட்டிருந்தாலும், இன்றும் பழமை மாறாமல் கம்பீரத்துடனே காட்சியளிக்கிறது Cologne Cathedral தேவாலயம்.

இந்த கோலோன் நகரில் சாக்லேட் தயாரிப்பு என்பது குடிசை தொழில் போல செய்து வருகின்றனர். ஏனைய ஜேர்மன் நகரங்களுக்கு மட்டுமல்லாமல், ஐரோப்பிய கண்டம் முழுமைக்கும் இந்த சாக்லேட் ஏற்றுமதி செய்து விற்கப்படுகிறது. இந்த கோலோன் நகரின் வழியே ரயின் நதி ஓடுகிறது. இந்த நதியில் நாள்தோறும் பல சொகுசு கப்பல்கள் போவதை காணலாம்.

இது வரை கூறப்பட்டுள்ள விடயங்கள் யாவும் ஒரு சோற்று பதம் போல மேலோட்டமான தரவுகள் தான். ஜெர்மனி நாட்டின் வித விதமான நகரங்களை பற்றியும் அவற்றின் அழகை பற்றியும் கூற இந்த ஒரு கட்டுரை போதாது.எனவே அடுத்து வரும் பாகங்களில் ஜெர்மனி நாட்டை பற்றி தொடர்ந்து எழுதுகிறேன்.

Related posts