நெல்சன் இயக்கத்தில் உருவாகி, வருகிற ஏப்ரல் 13 அன்று தளபதி விஜய்யின் பீஸ்ட் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது . படத்தின் ட்ரைலர் வெளியாகி விஜய் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை டபுளாக்கிவிட பீஸ்ட் பீவர் இப்போதே பரவ தொடங்கிவிட்டது. இன்னொருபக்கம் பீஸ்ட் பட காட்சிகளை எதாவது காரணம் சொல்லி சர்ச்சையாக்கி எதிர்பதற்கென்றே ஒரு கூட்டம் வழக்கம்போல் காத்து இருக்கிறது.
ரசிகர்கள் பீஸ்ட் கொண்டாட்டத்திற்காக தயாராக இருக்கும் நிலையில், இன்று சென்னையில் தளபதி 66 படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது. இதில் நடிகர் விஜய், டைரக்டர் வம்சி பைடபள்ளி, தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோர் கலந்து கொண்டனர். எளிமையாக நடைபெற்ற இந்த பூஜையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் கலந்து கொண்டுள்ளார். இந்த பூஜை போட்டோ தற்போது வெளியாகி செம டிரெண்ட் ஆகி வருகிறது. பீஸ்ட் படம் வெளியாவதற்கு முன்பே தளபதி 66 படத்துக்கு பூஜைப்போடப்பட்டதை விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர்.
தளபதி 66 படத்தின் ஹீரோயின் யார் என்பது கடந்த சில நாட்களாகவே ரசிகர்கள் இடையே பெரிய குழப்பமாக இருந்தது. ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி சுரேஷ், திஷா பதானி, கிருத்தி சனோன் என பல நடிகைகளின் பெயர்கள் சொல்லப்பட்டு வந்தது. கடைசியாக விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா தான் நடிக்கிறார் என்பது உறுதியாகி விட்டது. பூஜையில் அவர் கலந்து கொண்ட போட்டோவும் வெளியாகி அதை உறுதி செய்துள்ளது.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராக உள்ள தளபதி 66 படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. தெலுங்கின் புகழ்பெற்ற இயக்குனர் வம்சி பைடபள்ளி இப்படத்தை இயக்குகிறார்.
பீஸ்ட் படம் வெளியான பிறகு தளபதி 66 படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாகவும், இந்த படத்திற்கான டெஸ்ட் ஷுட்டை விஜய் ஏற்கனவே முடித்து விட்டதால் ஏப்ரல் கடைசி வாரத்தில் ஷுட்டிங் துவங்கலாம் எனவும் கூறப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் விஜய் நடிக்காத கதை என சொல்லப்படுவதால் தளபதி 66 படத்தின் கதைமேல் ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகமாகியுள்ளது. யாரெல்லாம் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.