தங்கம் என்பது ஒரு குடும்பத்தின் செல்வ நிலையை மதிப்பிட உதவுகிறது. இது ஒரு ஆடம்பர பொருளாவும் பாவிக்கப்படுகிறது. தமிழர்கள் தங்கள் பெண்ணின் திருமணத்தின் போது நகைகள் அணிவித்து கணவன் வீட்டிற்கு அனுப்புவது வழக்கம். மேலும், தமிழில் தங்களின் குழந்தைகளுக்கு தங்கம் என்று பெயர் சூட்டுவதும் வழக்கம். இந்தியாவின் செல்வ நிலையைக் கேட்ட பிற நாட்டவர்கள், கடல்வழிப் பயணமாக வந்து வாணிபத்தொடர்பு கொண்டிருந்தனர்.
ஒரு தங்க ஆபரணம் உங்கள் கைகளையும் காதுகளையும் கழுத்தையும் அலங்கரிக்கும் முன் கடந்துவரும் பாதை கொஞ்சநஞ்சமல்ல. பலரின் உழைப்பும் முயற்சியுமே இறுதிப்பயனாக நகையென உருவெடுத்து நம் கைக்கு வருகிறது. பெரும்பான்மை இந்தியர்கள் விரும்பும் நகைகள் தங்க நகைகளாகவே இருக்கின்றன. ராஜாங்கங்களின் சக்தியைத் தீர்மானிக்கும் இந்த உலோகம் எப்படி உருவானது எனத் தெரியுமா?
ஆஸ்டெக் பழங்குடியின மக்கள் தங்கம் என்பது ‘சூரியனின் வேர்வை’ எனக் கருதினர். இது உண்மையல்ல என்றாலும், இதைத் தங்கத்துக்கு ஏற்ற மிகத் துல்லியமான உவமை எனலாம்! பிரபஞ்சத்தில் காணப்படும் கோடானு கோடி நட்சத்திரங்களை இயக்கிக் கொண்டிருப்பது அணுக்கரு பிணைவு (Nuclear Fusion) எனும் செயல்பாடாகும். பிரபஞ்சம் தோன்றியபோது ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் ஆகிய இரு அணு வகைகளே உருவாகியிருந்தன. இப்போது நாம் காணும் பெரும்பாலான நட்சத்திரங்கள் ஹைட்ரஜன் அணுக்களால்தான் கட்டமைக்கப்பட்டு இருக்கின்றன. ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றிணைந்து அதைவிட எடை அதிகமான ஹீலியம், கார்பன், நைட்ரஜன், ஆக்சிஜன் ஆகிய தனிமங்களை முறையே உற்பத்தி செய்கின்றன. இந்த வரிசையில், ஒரு கட்டத்தில் ஒரு நட்சத்திரத்தின் மையம் இரும்பு அணுக்களால் நிரம்பும்போது, இரும்பின் இறுக்கம் காரணமாக நட்சத்திரத்தின் இயக்கம் நிலைகுலைந்து மொத்த நட்சத்திரமும் தீபாவளி லட்சுமி வெடி போல வெடித்துச் சிதறுகிறது! ‘சூப்பர்நோவா’ என அறியப்படும் இந்த மாபெரும் நட்சத்திர வெடிப்பில் ஏற்படும் வினையின் மிச்ச எச்ச சொச்சமாகக் கிடைப்பதுதான் நாம் உட்சபட்ச உலோகமாகக் கருதும் தங்கம் (மற்றும் பிற எடை அதிகமுள்ள தனிமங்கள்)!
பூமியில் மட்டுமல்ல, அண்டம் முழுவதும் உள்ள பல கிரகங்கள் மற்றும் பால்வெளியில் அங்கும் இங்கும் சுற்றித்தெரியும் பல விண்கற்களிலும் கூட தங்கம் உள்ளிட்ட பிற தனிமங்கள் இருக்கக்கூடும் என்பது விஞ்ஞானிகள் கருத்து. இது தெரிந்திருந்தால் டிக் டிக் டிக் ஜெயம் ரவியை நிச்சயமாக் இந்திய பெண்கள் விண்வெளிக்கு அனுப்பியிருக்கமாட்டார்கள். ஏனென்றால், உலகத்தின் மொத்த தங்கதத்தில் 10% சதவீதத்துக்கும் மேல் நம் இந்திய பெண்களிடம்தான் உள்ளது! எவ்வளவு என்றால், ஆயிரம் லாரிகளில் நிரப்பக்கூடிய அளவுக்கு கிட்டத்தட்ட 18,000 டன் தங்கம்!
தங்கம் பெரும்பாலும் நிலத்தடியில் தனி நிலையிலேயே ரேகை போல பாறைகளில் படர்ந்திருக்கும். தங்கம், சுரங்கங்கள் மூலம் தோண்டி எடுக்கப்படுகிறது.பாறைகளில் வெடி வைத்துத் தகர்த்துத் தங்கத்தை இரசாயன (வேதியியல்) முறையில் பிரித்தெடுக்கிறார்கள். அதன்பின் மின்பகுப்பு முறையில் சுத்தம் செய்யப்படுகிறது.
உலகில் கிடைக்கக் கூடிய தங்கத்தில் பாதி தென் ஆப்பிரிக்கா வில் வெட்டி எடுக்கப்படுகிறது. கனடா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஆஸ்திரேலியா, கொரியா ஆகிய நாடுகளிலும், தென் அமெரிக்கா விலும், இந்தியா வில் கர்நாடகா மாநிலத்தில் கோலார் என்னுமிடத்திலும் தங்கம் கிடைக்கிறது. இலங்கையிலுள்ள பூகொடை என்னுமிடத்திற் களனி ஆற்றுப் பகுதியில் ஆற்றுமண் படிவுகளில் தங்கம் அண்மைக் காலமாக பெறப்படுவதாகவும் கூறப்படுகின்றது. ஆயினும் இப்படிவுகள் மிகச் சொற்ப அளவுடையதாகவே கூறப்படுகின்றது.
1880களிலிருந்து தென்னாபிரிக்காவே உலகின் தங்க விநியோகத்தின் முக்கிய நாடாகவும் வளமாகவும் விளங்குகின்றது. இன்றுள்ள 50 விழுக்காடு தங்கம் இந்நாட்டிலிருந்தே அகழப்பட்டுள்ளது. 1970 ஆம் ஆண்டில் 1,480 தொன் எடையுள்ள தங்கத்தை இந்நாடு உற்பத்தி செய்ததுடன் இது உலகின் அவ்வாண்டின் 79%ஆன உற்பத்தி ஆகும். எனினும், 1905 ஆம் ஆண்டிலிருந்து முதன்மை வகித்த தென்னாபிரிக்காவை, சீனா 2007 ஆம் ஆண்டில் 276 தொன் தங்கத்தை அகழ்ந்து பின்தள்ளியது.
2014 ஆம் ஆண்டில் தங்கத்தினை அதிகம் உற்பத்தி செய்த நாடுகளில், முதன்மையானதாக சீனாவும் அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, உருசியா, ஐக்கிய அமெரிக்கா, கனடா, பெரு ஆகிய நாடுகளும் விளங்கின. 20ஆம் நூற்றாண்டில் தங்க அகழ்வில் முன்னணி வகித்த தென்னாபிரிக்கா ஏழாம் இடத்தில் இருந்தது.இந்நாடுகளுடன் கானா, மாலி, புர்கினா ஃபசோ, இந்தோனேசியா, உஸ்பெஸ்கிஸ்தான் ஆகியவையும் பிரதான தங்க உற்பத்தி நாடுகள் ஆகும்.