விளையாட்டு

ஏப்.6 சர்வதேச விளையாட்டு தினம்… அமைதி மற்றும் வளர்ச்சிதான் விளையாட்டின் நோக்கம்!

வளர்ச்சி மற்றும் அமைதிக்கான சர்வதேச விளையாட்டு தினம் (IDSDP) சமூக மாற்றம், சமூக மேம்பாடு, அமைதி மற்றும் புரிதலை வளர்ப்பதற்கு விளையாட்டின் பங்கை வெளிப்படுத்தும் வாய்ப்பாக ஏப்ரல் 6 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு, IDSDP ஆனது, விளையாட்டு மற்றும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் எவ்வாறு மக்களை ஒன்றிணைத்து, பாலங்களை உருவாக்கி, புரிந்துணர்வை வளர்த்துள்ளன என்பதைப் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

விளையாட்டுப் போட்டிகள் ஒரு சக்திவாய்ந்த சமூக பாலமாகவும் உறவுகளை வலுப்படுத்தவும் செய்கின்றன. விளையாட்டு மக்களிடையே ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதையை நிலைநாட்டும் அதே வேளையில் நிலையான வளர்ச்சி மற்றும் அமைதியை ஊக்குவிக்கும். ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை 2013 இன் தீர்மானத்தின்படி வளர்ச்சி மற்றும் அமைதிக்கான சர்வதேச விளையாட்டு தினம் முதன்முதலில் 2014 இல் கொண்டாடப்பட்டது.

எந்தவொரு நபரின் வாழ்க்கையிலும் விளையாட்டு ஒரு முக்கிய அங்கமாகும். தனிநபர்களின் ஆரோக்கியம் , வலிமை மற்றும் உடல் தகுதி ஆகியவற்றைக் கட்டியெழுப்புவது மட்டும் அல்லாமல், மனித உரிமைகளின் முன்னேற்றத்தை வலுப்படுத்தக்கூடிய ஒரு கருவியாகவும் விளையாட்டு பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு வளர்ச்சி மற்றும் அமைதிக்கான சர்வதேச விளையாட்டு தினத்தின் கருப்பொருள் “அனைவருக்கும் நிலையான மற்றும் அமைதியான எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் விளையாட்டின் பங்களிப்பு” என்பதாகும். நிலையான எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் விளையாட்டு எவ்வாறு உதவுகிறது என்பதை மையமாகக் கொண்டது.

ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கம் வாங்கவில்லை என்று சாடும் மக்கள் தங்கள் குழந்தைகளின் விளையாட்டு ஆர்வத்தை முளையிலே கிள்ளி விடுகின்றனர். இனியாவது குழந்தைகளின் திறமைகளுக்கு கற்பனை ஆற்றலுக்கு வழி விடுவோம்.

Related posts