திருமங்கையாழ்வார் சோழ நாட்டில் திருவாலி திருநகிரிக்கு மிக அருகிலே உள்ள திருக்குறையலூரில் பிறந்தார். சோழ முத்தரையர் மன்னர்கள் மற்றும் பரமேசுவரன், நந்திவர்மன் போன்ற பல்லவ மன்னர்களைப் பற்றிய குறிப்புகள் இவர் பாடல்களில் இருப்பதால் இவரை எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தவர் என்று வரலாறுகூற்று எடுத்துரைக்கிறது.
திருமங்கை ஆழ்வார் பிறக்கும் பொழுது கரிய நிறம் உடையவராய் இருந்ததால் பெற்றோர்கள் நீலன் என்னும் திருநாமம் சூட்டினர். இளம் வயதிலே போர்த் திறமைகளுடன் விளங்கினார். தந்தைக்குப் பின் தமது சோழ முத்தரையர் மரபு மன்னனின் சேனாதிபதியாக அமர்ந்து பல போர்களில் வெற்றி பெற்று பரகாலன் (எதிரிகளின் எமன்) என்ற பெயர் பெற்றார். இவருடைய வீரத்துக்குப் பரிசாக முத்தரைய சோழ மன்னன் இவரைத் திருமங்கை நாடு என்னும் குறுநிலத்திற்கு அரசனாக முடி சூட்டினார்.
ஆழ்வார்களிலேயே மிகவும் சிறப்புடையவர் திருமங்கை மன்னன். ஆழ்வார் பாடல்கள் நம் ஆலயங்களின் பழமையை நிரூபிக்கும் சரித்திரச் சான்றுகளாக உள்ளன. திருமாலின் சார்ங்கம் என்ற வில் – அம்சமாக பிறந்தவர். அரசகுடி மன்னனாகப் பிறந்து பக்தி மார்க்கத்தில் திளைத்தவர். அமங்கலை என்ற தேலோக கன்னி, கபில முனிவரின் சாபத்தால் பூமியில் குமுதவல்லி நாச்சியார் என்ற பெயரில் வளர்ந்து வந்தாள். இவளது புகழையும், அறிவையும் கேள்விப்பட்ட திருமங்கைஆழ்வார் இவளைத்திருமணம் செய்ய விரும்பினார்.
விஷ்ணுவின் பக்தையான குமுதவல்லியோ தன்னை திருமணம் செய்ய வேண்டுமானால் தினமும் ஆயிரத்தெட்டு வைணவர்களுக்கு அமுது படைக்க வேண்டும் என்ற நிபந்தனை விதித்தாள். நிபந்தனையின் பேரில் அமுது படைத்து, படைத்து அரண்மனையின் நிதி நிலை சரிந்தது. பேரரசின் வழக்கமாக கப்பம் கேட்டு வந்த ஏவலர்களிடம் தன் நிலையை கூறி அனுப்பி விட்டார். அவமதித்ததாக எண்ணி கோபமடைந்த முத்தரையச்சோழ மன்னன் அமைச்சர்களுடன் தன் படையை அனுப்பி ஆழ்வாரை பிடித்து வரும்படி கூறினான்.
ஆனால் அனைவரும் திருமங்கை மன்னரான நீலனால் விரட்டியடிக்கப்பட்டனர். எனவே மேலும் தமது ஆழ்வாரின் வீரத்தை பரிசோதிக்க எண்ணி சோழ மன்னனே பெரும் படையுடன் சென்றான். ஆனாலும் ஆழ்வார் அவர்களுக்கு எதிராக வாள்ஏந்தி நின்றார். ஆழ்வாரின் வீரத்தில் மகிழ்ந்த சோழநாட்டு சக்ரவர்த்தி அவரிடம் நேரில் சென்று பேச்சுப்படி கப்பம் கட்டுவதே சிறந்தது. அதுவரை அரசமரபு வாக்கு தவறியதால் என் கைதியாக கோயிலில் தங்கியிரு என்றார்.
சோழ மன்னன் கூறியபடி ஆழ்வாரும் மூன்றுநாட்கள் எதுவும் சாப்பிடாமல் கோயிலில் தங்கியிருந்தார். பசி மயக்கத்தில் தூங்கிய ஆழ்வாரின் கனவில் தோன்றிய காஞ்சிபுரத்து பெருமாள். தன் சேவைக்கு வந்தால் அவரது கடன் தீர்க்கும் வகையில் பொருளுதவி செய்வதாக கூறினார். தமது சோழ மன்னனின் அனுமதிபெற்று படையினருடன் காஞ்சிபுரம் சென்ற ஆழ்வார், பெருமாள் கூறிய இடத்தில் தோண்டவும், பெரும் புதையல் இருந்தது. அதை எடுத்து மக்கள் நலனுக்கான சோழ பேரரசுக்குரிய கடனை அடைத்து விட்டு மீதியை அமுது படைக்க வைத்துக்கொண்டார்.
இதையறிந்த சோழ மன்னன் ஆழ்வாரைப் பணிந்து, பணத்தை திருப்பிக்கொடுத்து அமுது படைக்கவைத்துக் கொள்ள கூறினார். இந்தப்பணமும் தீர்ந்து போகவே, ஆழ்வார் தன் அமைச்சர்களுடன் பணக்காரர்களிடம் கொள்ளையடித்து அமுதுபடைத்து வந்தார். ஒரு முறை நாராயணன் லட்சுமி தேவியுடன் மணக்கோலத்தில் வந்தார்.
ஆழ்வார் தன் படையினருடன் அவர்களை மிரட்டி அவர்களது நகைகளை பெற்றுக்கொண்டார். ஆனால் தன் கால் விரல் மோதிரத்தை மட்டும் நாராயணன் கழட்டவில்லை. ஆழ்வாரும் மோதிரத்தை கழட்டும்படி கூறியதற்கு, என்னால் முடியவில்லை முடிந்தால் நீயே கழட்டிக்கொள் என்றார் நாராயணன். அதேபோல் ஆழ்வாரும் குனிந்து தன் பற்களால் விரலைக்கடித்து மோதிரத்தை இழுத்தார். அப்போது நாராயணன் ஆழ்வாரின் காதுகளில் நாராயண மந்திரத்தை உபதேசித்தார்.
வந்திருப்பது நாராயணன் என்பதை அறிந்த ஆழ்வார் மண்டியிட்டு பெருமாளிடம் சரணடைந்தார்.
பெருமாளின் 108 திருப்பதிகளில் திருமங்கை ஆழ்வார் தனியாக சென்று 46 கோயில்களையும், மற்ற ஆழ்வார்களுடன் சேர்ந்து 36 கோயில்களையும் என மொத்தம் 82 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார். 12 ஆழ்வார்களில் இவர்தான் அதிக பெருமாள் திருத்தலங்களை மங்களாசாசனம் செய்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது வரலாற்றில் ஒரு சிறப்பு என்னவென்றால் இவர் மொத்தம் 82 பெருமாள் கோயில்களை மங்களாசாசனம் செய்திருந்தாலும், தான் பிறந்த சொந்த ஊரான திருக்குறையலூரில் உள்ள பெருமாள் கோயிலை மங்களாசாசனம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இறைவன் கோயிலில் எழுந்தருளி இருக்கும் தோற்றத்தில்
(அர்ச்சாவதாரம்) ஈடுபாடு கொண்டு ஏராளமான
பாசுரங்களைப் பக்திச் சுவை ததும்பப் பாடிய பெருமைக்கு உரியவர்.
மன்னன் ஆழ்வார் அவரது இறைப்பணி மற்றும் எந்நிலையிலும் கைவிடாத பக்தியும் எம்பெருமானின் மனதையும் வருடிய கள்வனாக நீங்கா புகழுடன் நிலைத்து போற்றப்படுகிறார்.