அறிவியல்

நம்மை ஆச்சரியமூட்ட காத்திருக்கும் எதிர்கால அறிவியல் அற்புதங்கள்!!!

அறிவியல் தொழில்நுட்பங்களும்,கருவிகளும் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்துகொண்டே போகின்றது. இன்று குழந்தைப் பருவத்தில் உள்ள பல தொழில்நுட்பங்கள், 2025-ம் ஆண்டுவாக்கில் உச்சத்தைத் தொடப் போகின்றன. எனவே, நம்மைச் சுற்றி, நம்ப முடியாத அறிவியல் அற்புதங்கள் நிகழப் போகின்றன.உலகப் பொருளாதார அமைப்பின், மென்பொருள் மற்றும் சமூகத்தின் எதிர்காலத்துக்கான உலக கொள்கை கவுன்சிலின் அறிக்கை இது பற்றி விரிவாகத் தெரிவிக்கிறது.

அவை பற்றிய ஒரு முன்னோட்டம். இதோ :

ரோபோ ராஜ்ஜியம்:

உற்பத்தித் துறையில் இன்றே ரோபோக்களின் ஆதிக்கம் அதிகம். அவை மேலும் மேலும் நவீனம் அடைந்துவரும் நிலையில், சேவை சார்ந்த பணிகளிலும் ரோபோக்கள் அதிகம் இடம்பெறுமாம். செடிகளுக்குத் தண்ணீர் வார்ப்பது போன்ற எளிய வேலைகளுடன், அபாயகரமான தொழில்கள், நுணுக்கமான வேலைகளையும் இனி ரோபோக்கள் கவனித்துக்கொள்ளும்.

எல்லாம் இணையத்துடன்:

கணினியின் சக்தி அதிகரித்து, சென்சார் எனப்படும் உணர்கருவிகளின் விலை குறைந்துவருவதால், அனைத்து சாதனங்களும் இணையத்துடன் இணைக்கப்படும் வாய்ப்பு அதிகரிக்கும். நீங்கள் அணிந்திருக்கும் ஸ்மார்ட்வாட்ச் முதல், நடக்கும் தளம் வரை எல்லாம் இணையத்துடன் இணைக்கப்படும் என்கிறார்கள் நிபுணர்கள். இப்படி, 2022-ம் ஆண்டின் இறுதிக்குள் ஒரு ‘டிரில்லியன்’ சென்சார்கள் இணையத்துடன் இணைக்கப்பட்டிருக்கும்.

‘3டி பிரிண்ட்’ கார்:

எழுத்துகளையும், படங் களையும் தாளில் பிரிண்ட் செய்து தந்துவிடுகிற பிரிண்டரைப் போல ஒரு பொருளை அப்படியே உருவாக்கித் தந்துவிடுவதுதான், ‘3டி பிரிண்டர்’. புதிய அறிவியல் அதிசயமாக உருவாகி இருக்கிற 3டி பிரிண்டர்கள் மேலும் சக்திவாய்ந்ததாகவும், மேலும் சிக்கலான பொருட்களை உருவாக்கக்கூடியதாகவும் மாறுமாம். இப்போதே பல கார் நிறுவனங்கள், தங்களின் கார் மாதிரிகளை 3டி பிரிண்டர்களை கொண்டு உருவாக்குகின்றன. பிரபல ஆடி கார் நிறுவனம் கூட தனது மெட்டல் பிரிண்டரை பயன்படுத்தி ஒரு குட்டி காரை சமீபத்தில் உருவாக்கியிருக்கிறது. சில ஆண்டுகளில், முழு அளவில் 3டி பிரிண்டர்களை கொண்டே கார்களை தயாரிக்கும் முயற்சியை மற்றொரு புதிய நிறுவனம் தொடங்கவிருக்கிறது.

தகவல் திரட்டு:

அரசும் தனியாரும் பல்வேறுபட்ட தகவல்களை, பல நேரங்களில் திரட்ட வேண்டியிருக்கிறது. அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், பல்வேறு தகவல்களைத் திரட்டுவது, அவற்றை பாதுகாப்பாகப் பராமரிப்பது, தேவையான போது எடுத்துப் பயன்படுத்துவது எல்லாமே எளிதாகிவிடும். அரசாங்கமும் வழக்கமான கணக்கெடுப்பு முறையில் இருந்து மாறி, பெரிய அளவிலான மின்னணு, தானியங்கி முறைக்கு மாறிவிடும். 2023-ம் ஆண்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு மிக நவீனமான கணினி முறைக்கு மாறிவிடும் என்று பலரும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

உடலுடன் இணைந்த மொபைல்போன்:

பலருக்கு இன்று மொபைல்போன் என்பது உடலுடன் இணைந்த பாகம் போலவே ஆகிவிட்டது. 2025-ம் ஆண்டளவில் அது நிஜமாகவே உடலுடன் இணைந்துவிடும் என்கிறார்கள் அறிவியல் வல்லுநர்கள். அப்போது, வர்த்தக ரீதியாக உடலுடன் போன் பொருத்தப்படும் நிலை வரும் என்று அவர்கள் கூறுகின்றனர். உடலில் பொருத்தப்படும் இந்தச் சாதனம் மூலம், மூளை அலைகள் வழியாக பிறரைத் தொடர்புகொள்ள முடியும். மேலும் நமது உடல் ஆரோக்கியத்தை துல்லியமாகக் கண்காணித்துச் சொல்வது போன்ற வேலைகளையும் இச்சாதனம் செய்யும்.

போக்குவரத்தில் புதுமை:

வருங்கால அறிவியல் தொழில்நுட்பம், போக்குவரத்துச் சாதனங்களில் பல புதுமைகளைப் புகுத்தும் என்று தெரிவிக்கப்படுகிறது. போக்குவரத்து வாகனங்களில் வேகம், வசதி, பாதுகாப்பு அம்சங்கள் எல்லாமே அதிகரிக்கும். குறைந்த எரிபொருளில் சிறந்த செயல்திறனை அளிக்கும் வாகனங்களின் புகை வெளியீடும் குறைவாக இருக்கும். ஓட்டுநருக்கு உதவும் பல்வேறு அதிஉயர்நுட்ப மின்னணுச் சாதனங்கள், வாகனங்களில் இடம் பெறும்.

மோசமான வானிலையின்போது காட்சிகளை தெளிவாகக் காட்டக்கூடிய, மோதவரும் ஆட்கள், வாகனங்களை தவிர்க்கக்கூடிய அமைப்புகள் போக்குவரத்துச் சாதனங் களில் இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, ஓட்டுநர்கள் இல்லாத வாகனங்களும் 2025-க்கு மேல் பரவலாக பயன்பாட்டுக்கு வந்துவிடும். புல்லட் ரயில்கள்,வேகத்தில் விமானத்தை நெருங்கும் நிலையில், விமானங்கள் மேலும் வேகம் பெறும். அதிநவீன ‘சூப்பர்சானிக்’ விமானங்கள் மூலம் உலகின் எந்த மூலையையும் சில மணி நேரங்களில் அடைந்துவிடலாம்.

புலன் விசாரணையில் :

குற்றவியல் புலன் விசாரணை, தடய அறிவியல் சோதனைகள், நவீன அறிவியல் தொழில்நுட்பத்தின் மூலம் அடுத்தகட்டத்துக்குச் செல்லும். தற்போதே டி.என்.ஏ. பரிசோதனை முறை, குற்றவாளிகளின் கைரேகைகளை தானாக ஒப்பிட்டுக் கண்டுபிடித்துச் சொல்லும் மென்பொருள், சாட்சிகள் கூறும் அடையாளங்களை வைத்து குற்றவாளிகளின் படங்களை உருவாக்கும் முறை போன்றவை பயன்பாட்டில் உள்ளன.

எதிர்காலத்தில், குற்றவாளிகள் தவறவிடும் நுண்ணிய தடயங்களையும் கொண்டு அவர்களை மோப்பம் பிடித்து விடக்கூடிய நவீன தொழில்நுட்பங்கள் புலனாய்வு, தடயவியல் துறையில் பயன்படுத்தப் படும். எங்கெங்கும் கண்காணித்துக் கொண்டே இருக்கும் காமிராக்கள் குற்றவாளிகளுக்கு தலைவலியைத் தரும். பாதுகாப்பு அம்சங்கள், சோதனைகளிலும் அதிநவீனம் புகும்.

இப்படி ஒவ்வொரு துறையிலும் அறிவியல் தொழில்நுட்பத்தின் அசத்தல்கள் எல்லையின்றி நீண்டுகொண்டே போகும் என்று அடித்துச் சொல்கிறார்கள், பல்துறை நிபுணர்கள்.
அறிவியல் உலகில் நம்மை ஆச்சர்யப்படுத்த என்னவெல்லாம் காத்திருக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்!

Related posts