அறிவியல்

இயற்கையின் மாயாஜாலம் – மகரந்த சேர்க்கை!

மகரந்த சேர்க்கை என்பது பூக்கள் தங்களுக்குள் உறவுகொண்டாடும் ஒரு அற்புத இயற்கை நிகழ்வு. மகரந்த சேர்க்கை மூலம் காய் கனிகள் உருவாகும். சில பூக்கள் தங்களுக்குள்ளாகவே மகரந்த சேர்க்கையை ஏற்படுத்திக்கொள்ளும். ஆனால் பெரும்பாலான பூக்கள் இயற்கையாக கிடைக்கப்பெறும் ஊடகங்களின் உதவியை நாடுகின்றன.
இந்த வகையான மகரந்த சேர்க்கை நான்கு வழிகளில் நிகழ்கிறது.

பூச்சிகள் :

இயற்கையாக மகரந்த சேர்க்கை நடைபெறுவதற்கு பூச்சிகள் ஒரு பெரிய காரணியாக விளங்குகின்றன. பட்டாம்பூச்சிகள்,தேனீக்கள் ,வண்டுகள் என பூக்களிலிருந்து தேனை எடுத்து உண்ணக்கூடிய பூச்சிகள் அனைத்தும், அந்த பூக்களின் மகரந்த சேர்க்கைக்கு உதவுகின்றன. ஒரு பூச்சி ,தேனை உண்பதற்காக பூவில் அமரும்போது, அந்த பூச்சியின் கால்களில் உள்ள மெல்லிய கொக்கி போன்ற ரோமங்களில், பூவ்வின் மகரந்த துகள்கள் (Pollen Grains) ஒட்டிக்கொள்ளும். அதே பூச்சி வேறு மலருக்கு சென்று தேனை எடுக்கும்போது, அதன் கால்களில் ஒட்டிக்கொண்டுள்ள மகரந்த துகள்கள்,அந்த பூவில் விழுந்து விடும். இவ்வாறு பூச்சிகளின் மூலம் மகரந்த சேர்க்கை ஏற்படுகின்றது. இந்த முறையில் பூச்சிகள் தங்களுக்கான உணவு தேவையை பூர்த்தி செய்வதுடன், காய் கனிகளின் உற்பத்திக்கும் உதவி செய்கின்றன.

 

பறவைகள்:

பறவைகளில் இறைச்சி உண்ணக்கூடிய பறவைகள் தவிர்த்து மீதம் இருக்கும் பல பறவைகளும், செடிகள் மற்றும் மரங்களில் கிடைக்கும் பழங்களை உண்டு உயிர் வாழ்கின்றன. இன்னும் சில பறவைகள் பூக்களில் உள்ள தேனை உண்டு வாழ்கின்றன. பூக்களில் தேனை எடுத்து குடிப்பதற்காகவே நீளமான அலகுகளை கொண்ட பறவைகளும் உள்ளன. இந்த நீளமான அலகு பல லட்சம் ஆண்டுகளின் பரிணாம வளர்ச்சி தந்த பரிசு என்றே கூறலாம். குறிப்பாக ஹம்மிங் பறவைகள் இந்த விதமான நீளமான அலகுகளை கொண்டிருக்கும்.

பறவைகளுக்கு நல்ல கண் பார்வை இருந்தாலும், அவைகளுக்கு மோப்ப சக்தி மிகவும் குறைவே.எனவே இயறக்கை அவைகளுக்கு உதவும் வகையில் பற்பல வண்ணங்களில் பூக்களை உருவாக்கி தந்திருக்கிறது. இந்த வண்ணமயமான பூக்களிலிருந்து தேனை உன்ன பறவைகள் வரும்போது அவைகளின் அலகுகளில் மகரந்த துகள்கள் ஒட்டிக்கொள்ளும்.பிறகு வேறு மலருக்கு செல்லும்போது, அந்த அலகில் ஒட்டிக்கொண்டுள்ள மகரந்த துகள்கள் பூவுக்குள் விழுந்து சூல் கொள்ளும். பறவைகள் தேன் உண்பதற்கு மட்டும் அல்லாமல், பூக்களில் அமர்ந்திருக்கும் பூச்சிகளையும் உண்பதற்காக பூக்களை தேடி வருகின்றன. அவ்வாறு வரும்போதும் மகரந்த சேர்க்கைக்கு உதவி செய்கின்றன.

வவ்வால்கள் :

பழம்தின்னி வவ்வால்கள் பழங்களை உண்டு அதன் விதைகளை எச்சமாக நிலத்தின் மீது இட்டுச்செல்லும். இவ்வாறு எச்சமாக விழும் விதைகள், காலப்போக்கில் மரமாக வளரும். மூக்குப்பகுதி நீளமாக உள்ள ஒரு வகை வவ்வால் இனம் பூக்களில் தேன் உண்டு வாழ்கின்றது. அந்த வவ்வாலும் மகரந்த சேர்க்கைக்கு உதவுகின்றது.

காற்று :

நிறைய செடிகள் தங்களுடைய விதைகளை காற்றில் பறந்து செல்லும் விதத்தில் வடிவமைத்திருக்கின்றன. நெல், சோளம் ,புற்கள் என்று பல தாவரங்களும் காற்றின் மூலமே மகரந்த சேர்க்கையை நிறைவேற்றிக்கொள்கின்றன. பலமாக காற்று வீசும்போது விதைகள் தாவரங்களிலிருந்து பிரிந்து காற்று வீசும் திசையில் பறந்து வேறு தாவரங்களில் சேர்ந்துவிடும்.

தேனீக்கள் மட்டும் இறந்து விட்டால் நான்கே ஆண்டுகளில் இந்த உலகம் அழிந்து விடும் என்று அறிவியல் உலகம் கூறுகின்றது. இதன் மூலம் மகரந்த சேர்க்கையின் மகத்துவத்தை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. இயற்கையை அழிக்காமல், அதன் போக்கில் விட்டுவிட்டு நாமும் இயற்கையோடு இயைந்த நல்வாழ்வை வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.

 

Related posts