உடுப்பி கிருஷ்ணர் கோயில் கர்நாடக மாநிலம் உடுப்பி எனும் நகரில் அமைந்துள்ளது. வாருங்கள் இந்த கோவிலின் வரலாற்றை விரிவாக அறிந்து கொள்ளலாம். இத்தலத்தின் மூலவர் கிருஷ்ணர். இக்கோயிலில் மத்வ புஷ்கரிணி எனும் தீர்த்தமுள்ளது. சந்திரக் கடவுள் தனது மனைவிகளான இருபத்து ஏழு நட்சத்திரங்களுடன் கிருஷ்ணரை வழிபட்ட தலம். இங்கு நாள்தோறும் அன்னதானம் அளிக்கின்றனர்.
இங்கு குழந்தை வடிவில் கண்ணன் காட்சி தருகிறார். வலது கையில் தயிர் கடையும் மத்தும், இடது கையில் வெண்ணையும் ஏந்தியுள்ளார். தன் கணவர் குழந்தையாக இருந்த போது, எப்படி இருந்தார் என்று பார்க்க ருக்மணி ஆசைப்பட்டாள். அதனால், தேவலோக சிற்பியான விஸ்வகர்மா மூலம் ஒரு கிருஷ்ண விக்ரகத்தைச் செய்தாள். அந்த விக்கிரகமே உடுப்பியில் வழிபாட்டில் உள்ளது.
விஸ்வகர்மாவால் செய்யப்பட்டு துவாரகையில் ருக்மிணி தேவியால் வழிபடப்பட்டு துவாரகை கடலில் மூழ்கிய போது மூழ்கி பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து மத்வருக்குக் கிடைத்து, மத்வராலேயே பிரதிஷ்டை செய்யப்பட்ட பாலகிருஷ்ணரின் திருவுருவமே உடுப்பி கிருஷ்ணரின் கோயிலில் உள்ளது.
ஸ்ரீ மத்வாச்சாரியார் அவர்களுக்கு கிடைத்த கிருஷ்ணர் சிலையைக் கொண்டு உடுப்பியில் கோவில் அமைத்தார் . கடலில் புயல் ஏற்பட்ட போது மத்வர் புயலை நிறுத்திப் புயலில் சிக்கிய கப்பலைக் காப்பாற்றியதால் கப்பல் மாலுமியால் கிருஷ்ணர் சிலையும் பலராமன் சிலையும் கிடைத்தாக வரலாறு சொல்கிறது. கிருஷ்ணமடம் என்று அழைக்கபடுகிறது இந்த மடம்.
தட்சனின் சாபத்தால் தனது ஒளியையும் அழகையும் இழந்து வருந்திய சந்திரன், சிவபெருமானை நோக்கி உடுப்பியில் கடும் தவம் செய்து இழந்த ஒளியையும் அழகையும் திரும்பப் பெற்றார். அப்போது சந்திரன் நிர்மாணித்த திருக்குளம் ’சந்திர புஷ்கரணி’. நட்சத்திரங் களின் அதிபதியான சந்திரன் தவம் புரிந்ததால் (உடு=சந்திரன்;பா=அதிபதி) உடுபா என்றும் பின்னர் அது மருவி உடுப்பி என்றும் ஆனது.
உடுப்பி கிருஷ்ணனுக்கு வழிபாடு செய்வதற்காக எட்டு சீடர்களைத் தேர்ந்தெடுத்து கணியூர் மடம், சோதே மடம், புதிகே மடம், அத்மார் மடம், பேஜாவர் மடம், பாலிமார் மடம், கிருஷ்ணாபுரம் மடம், சிரூர் மடம் என எட்டு மடங்களையும் நிர்மாணித்து ஒவ்வொரு மடமும் இரண்டு மாதங்கள் நிர்வகிக்க வேண்டும் என்ற நடைமுறையை மத்வர் ஏற்படுத்தினார்.
புதிய சுவாமி மடத்தின் பொறுப்பை ஏற்கும் விழா பர்யாய வைபவம் என்று கொண்டாடப்படுகின்றது. உடுப்பியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் விழாவாக இது அமைகிறது. இவ்விழாவின் போது விறகுத்தேர் அமைக்கப்படுகின்றது. இத்தேர் விறகுதான் கோயில் சமையலுக்குப் பயன்படுகின்றது.
முன்பு கனகதாசர் என்ற மகான் தாழ்த்தப்பட்டிருந்த குலத்தில் பிறந்திருந்ததால் உடுப்பி கோவிலில் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அவர் தினமும் உடுப்பி கிருஷ்ணனின் கருவறைக்குப் பின்னால் நின்று ஏகதாரி வீணை எனும் ஒரு கம்பி மட்டும் கொண்ட வாத்தியக் கருவியை மீட்டி வழிபட்டு வந்தார். ஒருநாள் கருவறையின் பின்பக்கச் சுவரின் கற்கள் தாமாகவே விழுந்து உடுப்பி கிருஷ்ணரும் பின்புறச்சுவர் நோக்கித் திரும்பி கனக தாசருக்கு காட்சியளித்தார்.
கனகதாசர் கண்ணனை வழிபட வழிவகுத்த ஒன்பது துவாரங்கள் கொண்ட பலகணி கனகதண்டி என அழைக்கப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் கனகதாசர் கிருஷ்ணரை தரிசித்த பலகணி வழியாகவே மூலவரை தரிசனம் செய்யும் வழக்கமும் இந்நிகழ்வுக்குப் பின்னர் ஏற்பட்டது. தற்போது அதுவே நடைமுறையில் உள்ளது.
இந்த கோவிலுக்கு வாசல் கதவுகள் இல்லை. ஜன்னலைப் போன்ற அமைப்புக் கொண்ட வழி மட்டுமே உண்டு. கர்ப்பகிரகத்தின் நுழைவு வாயில் விஜயதசமி அன்று மட்டுமே திறந்திருக்கும். மற்ற நாட்களில் சன்னதியின் இருபுறமும் உள்ள ஜன்னல் வழியாக மட்டுமே கண்ணனைத் தரிசிக்க முடியும்.