நாம் இன்று பயன்படுத்தக்கூடிய பென்சிலானது இந்த வடிவத்தையும் பயன்பாட்டையும் அடைவதற்கு 500 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது என்பது தெரியுமா உங்களுக்கு? எதிர்பாராதவிதமாக கண்டறியப்பட்ட ஒரு மூலப்பொருளில் இருந்து பென்சில் பயணம் துவங்கியது. ஏகப்பட்ட போட்டிகள் முயற்சிகள் ஆகியவற்றைக் கடந்து ஒவ்வொருவர் வாழ்விலும் முக்கிய பங்காற்றிக்கொண்டு இருக்கிறது பென்சில்.
16 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து நாட்டின் பரோடேல் [Borrowdale] எனும் பகுதியில் ஒரு மரம் சாய்ந்து விழுந்தது. அதன் வேர்ப்பகுதியில் சாம்பல் நிறத்திலான ஒரு உலோகம் போன்றதொரு பொருள் படிந்து இருப்பதை கண்டனர் அப்பகுதி மக்கள். ஈயம் போன்று தோற்றமளித்தாலும் அது ஒரு உலோகம் இல்லையென அவர்கள் அறிந்தார்கள். பிறகு தான் அவர்களுக்கு அது சுத்தமான கார்பன், கிராபைட் என்பது தெரிய வந்தது.
இதனை எப்படி பயன்படுத்துவது என்று அவர்களுக்கு தெரியவில்லை. ஒரு பேப்பரில் குறியீடுகளை கிராபைட் கொண்டு குறித்தால், அதிக கறுப்பு நிறத்தோடு அடர்த்தியாக இருப்பதை அறிந்திருந்தார்கள்.
ஆங்கிலேயர்கள் கிராபைட் கட்டிகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி குச்சிகளில் பொருத்தி எழுத பயன்படுத்துகிறார்கள். இன்னும் சிலரோ அதனை காகிதங்களில் சுற்றி வெளியில் விற்கவும் ஆரம்பித்தார்கள். அப்போதுதான் அதற்கு பென்சில் என பெயர் வந்தது. தரமான பிரஷ் என்பதற்கு லத்தின் மொழியில் பென்சிலியம் [pencillum] என்று பெயர். அதுவே சுருங்கி பென்சில் என மாறிப்போனது.
உலக அளவில் விரும்பப்படும் ஒரு பொருளாக பென்சில் எழுதுபொருள் மாறத்துவங்கி இருந்த காலம். அதனை ஆங்கிலேயே அரசு லாபம் ஈட்டும் ஒரு விசயமாக மாற்றிட முயற்சியெடுத்தது. பரோடேல் [Borrowdale] பகுதியை முற்றிலுமாக சுற்றி வளைத்து அதனை சுற்றி இருந்த பகுதிகளிலும் கார்பைட் தேடலை முடுக்கிவிட்டது. ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் கிராபைட் கண்டறியப்பட்டது. ஆனால், தரத்தின் அடிப்படையில் இங்கிலாந்து முன்னனி வகித்தது.
மாடர்ன் பென்சில் உருவாக்கம் :
1793 ல் இங்கிலாந்து நாடு பிரான்சு நாட்டின் மீது போர் தொடுத்தது. இதனால், பிரான்ஸ் நாட்டுக்கு பென்சில் ஏற்றுமதி தடைப்பட்டது. இந்த தடையால் இங்கிலாந்துக்கும் இழப்பு ஏற்பட்டது.
இதற்கு தீர்வு காண விரும்பியது பிரான்சு. அந்நாட்டின் அமைச்சர் லாசரே கார்னோட் [Lazare Carnot] ஒரு குழுவை அமைத்தார். நிக்கோலாஸ்-ஜாக் கான்டே [Nicolas-Jacques Conté] என்ற அறிவியல் அறிஞர் அந்த குழுவில் இடம்பெற்றிருந்தார்.
அவரது முயற்சியில் ஒரு புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தினார். வெறும் கிராபைட் துண்டுகளை நேரடியாக பயன்படுத்தாமல் கிராபைட் உடன் வெவ்வேறான அளவுகளில் கிளே [clay] கலந்து பயன்படுத்தலாம் என்று கண்டறிந்தார்.
மேலும் ஆங்கிலேயர்கள் மரக்கட்டையில் ஒரு துளையிட்டு அதில் கிராபைட் மற்றும் கிளே கலவையை கொட்டி அதனை இன்னொரு மரப்பொருளால் மூடி பயன்படுத்தலாம் என கண்டறிந்தார்.
1795 ல் இந்த வடிவமைப்பிற்கு காப்புரிமை பெறப்பட்டது. நாம் இன்று பயன்படுத்தும் 1HB , 2 HB பென்சில் அனைத்துமே கான்டேவின் கண்டுபிடிப்புதான்.
இன்று ஒவ்வொரு குழந்தைகளின் கைகளிலும் தவழுகின்ற பென்சில் 500 ஆண்டுகள் பாரம்பரியம் வாய்ந்தது என்பது ஆச்சர்யம் கலந்த உண்மை