2021 ஐபிஎல் தொடர் தினேஷ் கார்த்திக் அவர்களுக்கு ஒரு பிலேயராக மறக்கவேண்டிய ஒரு சீசனாகவே அமைந்தது. கடந்த வருடம் கேகேஆர் அணியின் கேப்டனாக இருந்த தினேஷ் கார்த்திக் தொடரின் பாதியில் கேப்டன் பதவியை விட்டு விலகினார். கேப்டனாக இருந்துகொண்டு தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை என்று கூறினார்.
தொடரின் பாதியில், குறிப்பாக கேகேஆர் அணி தொடர் தோல்வியில் இருந்தபோது அவரின் இந்த நடவடிக்கை பலரால் விமர்சிக்கப்பட்டது. அதற்கு ஏற்றாற்போல்தான் தினேஷ் கார்த்திக் அவர்களின் பேட்டிங்கும் கடந்த வருடம் முழுக்க இருந்தது.
இந்நிலையில், கேகேஆர் அணியில் இருந்து கழட்டிவிடப்பட்ட தினேஷ் கார்த்திக், இந்த வருட ஏலத்தில் ஆர்சிபி அணிக்கு விளையாட தேர்வானார். இந்த வருட ஐபிஎல் தொடரில் தொடக்கம் முதலே அதிரடி காட்டிவரும் தினேஷ் கார்த்திக் ஒரு நல்ல பினிஷெராக மாறிக்கொண்டிருக்கிறார். நடப்பு சீசனின் முதல் போட்டியில் 14 பந்துகளில் 32 ரன்கள் விளாசிய தினேஷ் கார்த்திக், 2வது ஆட்டத்தில் 7 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார்.
ஆர்சிபி – ராஜஸ்தான் அணிக்கு இடையே நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 169 ரன்கள் குவித்தது. 170 ரன்களை இலக்காக வைத்து விளையாடிய ஆர்சிபி அணி 87 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 44 விளாசி ஆர்சிபி அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக்கின் ஸ்ட்ரைக் ரேட் 204.5 ஆக இருப்பது ஆர்சிபி அணிக்கு பலமாக அமைந்ததோடு தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்திற்கு சான்றாகா உள்ளது. நேற்று ராஜஸ்தான் அணியிடம் ஆர்சிபி அணிக்கு வெற்றியை தேடித்தந்து ஆட்டநாயகன் விருதுபெற்ற தினேஷ் கார்த்திக் தனது பேட்டிங் குறித்து பேசியுள்ளார். அதில், கடந்த வருட ஐபிஎல் தொடரில் என் திறமைக்கு நானே நியாயம் செய்யவில்லை. அது எனக்கு மிகுந்த மன வேதனையை தந்தது.
இதனால், இந்த வருட ஐபிஎல் சீசனுக்கு முன் தனித்துவமான பயிற்சியில் ஈடுபட்டேன். பயிற்சியின் போது மனதுக்குள் போட்டிக்கான சூழலை செயற்கையாக உருவாக்கிக்கொண்டு, அதற்கு ஏற்றார் போல் பயிற்சி எடுத்தேன். இது நல்ல பலனை தருகிறது. இருபது ஓவர் கிரிக்கெட்டில் நெருக்கடியான சூழலிலும் அமைதியாக இருந்து நமது ஆட்டத்தை நம்பி விளையாட வேண்டும். எனக்குள் இருக்கும் கிரிக்கெட் இன்னும் முடியவில்லை என்று எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன்’ என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய ஆர்சிபி கேப்டன் டுபிளஸிஸ், தோனி சிறந்த ஃபினிஷர், அதற்கு பிறகு தினேஷ் கார்த்திக் தான் அப்படியொரு கூலான விளையாட்டை வெளிப்படுத்துகிறார். தினேஷ் கார்த்திக் போன்ற நபர் அணியில் இருக்கும் போது மற்ற வீரர்கள் சுதந்திரமாக விளையாட முடியும். ஹர்சல் பட்டேலும் நன்றாக விளையாடி வருகிறார் என்று கூறினார்.