ஐசிசி ஆடவர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரான இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில், சூப்பர் 8 சுற்றுக்கு பிறகு நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
இந்நிலையில் நாளை (மார்ச் 5) நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியை எதிர்த்து, ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் எந்த அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இவ்விரு அணிகளும் சர்வதேச டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையிலும் 29 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அதில் இந்திய அணி 17 வெற்றிகளை பதிவு செய்து தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது. மறுபக்கம் இங்கிலாந்து அணி 12 போட்டிகளில் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றியை பதிவு செய்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது..
வான்கடே கிரிக்கெட் மைதானம்
மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானம் பேட்டர்களுக்கு சாதகமான மைதானமாக திகழ்கிறது. இங்கு இதுவரை 20 சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 10 போட்டிகளிலும், சேஸிங் செய்த அணிகள் 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மேலும் இந்த போட்டி இரவில் நடைபெறுவதன் காரணமாக, பனியின் தாக்கமும் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.
நேரலை தகவல்கள்
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் நேரலையில் ஒளிபரப்பு செய்கிறது. அதே போல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரசிகர்கள் இந்த போட்டியை காண முடியும். இதில் இப்போட்டியானது இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும் நிலையில், டாஸ் நிகழ்வு மாலை 6.30 மணிக்கு நடைபெறும்.

