விளையாட்டு

சுழல் மாயாஜாலத்தால் ஹாட்ரிக் விக்கெட்டை ருசித்த சஹால் – த்ரில் வெற்றிப்பெற்ற ராஜஸ்தான்!

சஹாலின் சுழல் மாயாஜாலத்தால் ராஜஸ்தான் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. பரபரப்புக்கு பஞ்சமில்லாத இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

ராஜஸ்தானின் அதிரடியான பேட்டிங்

ராஜஸ்தான் அணியிக்கு, ஜோஸ் பட்லர் – தேவ்தத் படிக்கல் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய பட்லர் அரைசதம் விளாசினார். மறுமுனையில் நிதானமாக விளையாடிய படிக்கல் 24 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 38 ரன்னில் ஆட்டமிழந்தார். விக்கெட் இழப்புகளுக்கு மத்தியில் தனது அதிரடியை தொடர்ந்த பட்லர் சதம் விளாசினார்.
நடப்பு தொடரில் அவர் பதிவு செய்த 2வது சதமாகும். கொல்கத்தா அணியின் பந்துவீச்சை பறக்கவிட்ட பட்லர், 103 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது. தொடக்கத்தில் விக்கெட்டுகளை எடுக்க திணறிய கொல்கத்தா அணியில் சுனில் நரேன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கொல்கத்தா அணி

ராஜஸ்தான் அணி நிர்ணயித்த இமாலய இலக்கை துரத்திய கொல்கத்தாஅணிக்கு, தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அணியின் தொடக்க வீரரான சுனில் நரைன் முதல் ஓவரிலையே ரன் அவுட் ஆகி வெளியேறினார். அதன்பிறகு, ஜோடி சேர்ந்த ஃபின்ச் – ஷ்ரேயாஸ் நிதானமாக விளையாடி ரன் ரேட்டை குறைய விடாமல் பார்த்துக்கொண்டனர்.

வெற்றிப்பாதையில் அணி சென்றுகொண்டிருந்தபோது இருவரும் அரைசதம் அடித்து அவுட் ஆகினர். அடுத்து வந்த சிவம் மாவி மற்றும் கம்மின்ஸ் சஹாலின் சூழலுக்கு இரையாகினர். அற்புதமாக பந்துவீசிய சஹால் ஹாட்ரிக் விக்கெட்டை ருசித்தார்.
இருப்பினும், ஆட்டத்தை விறுவிறுப்புடன் வைத்திருந்த உமேஷ் யாதவ், டிரென்ட் போல்ட் வீசிய 18வது ஓவரில் சிக்ஸர், பவுண்டரி என வெளுத்து வாங்கினார். இதனால், கொல்கத்தாவின் வெற்றிக்கு 12 பந்துகளில் 18 ரன்கள் தேவைப்பட்டது.

19வது ஓவரை வீசிய பிரசித் கிருஷ்ணா 7 ரன்கள் மட்டும் கொடுக்க… கொல்கத்தாவுக்கு கடைசி 6 பந்துகளில் 11 ரன்கள் தேவைப்பட்டது. ஓபேட் மெக்காய் வீசிய 20வது ஓவரை சந்தித்த ஷெல்டன் ஜாக்சன் முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்து அடுத்த பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 3 வது பந்தில் வருண் சக்கரவர்த்தி ஒரு ரன் எடுக்க 4வது பந்தை சந்தித்த உமேஷ் சிக்ஸர் அடிக்க முயன்று போல்ட் ஆனார். இதனால், அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த கொல்கத்தா அணி 210 ரன்னில் சுருண்டது. சிறப்பாக பந்து வீசிய சஹால் 5 விக்கெட்டுகளை தட்டித்தூக்கினார். இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி, ஊதா நிற தொப்பியை வசப்படுத்தியுள்ளார்.

Related posts