தமிழகத்தைச் சேர்ந்த 18 வயதான டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வ தீனதயாளன், கவுகாத்தியில் இருந்து ஷில்லாங்கிற்குச் சென்றபோது சாலை விபத்தில் உயிரிழந்தார்.
தமிழகத்தைச் சேர்ந்த 18 வயதான டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வ தீனதயாளன், கவுகாத்தியில் இருந்து ஷில்லாங்கிற்கு டாக்ஸியில் ஞாயிற்றுக்கிழமை(ஏப்ரல் 17) பயணம் செய்தபோது சாலை விபத்தில் உயிரிழந்ததாக இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு (TTFI) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இன்று தொடங்க உள்ள 83வது தேசிய மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்காக கவுகாத்தியில் இருந்து ஷில்லாங்கிற்கு மூன்று சக வீரர்களுடன் விஸ்வ தீனதயாளன் பயணம் செய்து கொண்டிருந்தார்.
அப்பொழுது ஏற்பட்ட விபத்தில், விஸ்வ தீனதயாளனுடன் பயணித்த ரமேஷ் சந்தோஷ் குமார், அபினாஷ் பிரசன்னாஜி சீனிவாசன் மற்றும் கிஷோர் குமார் ஆகிய மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மூவரும் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எதிர் திசையில் இருந்து வந்த 12 சக்கர டிரெய்லருடன் ஏற்பட்ட இந்த விபத்தில் டாக்ஸி டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார் எனவும் விஷ்வா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் வடகிழக்கு இந்திரா காந்தி பிராந்திய சுகாதார மற்றும் மருத்துவ அறிவியல் நிறுவனம் அறிவித்துள்ளது.
தேசிய தரவரிசைப் பட்டங்கள் மற்றும் சர்வதேசப் பதக்கங்களை வென்ற நம்பிக்கைக்குரிய வீரரான விஸ்வ தீனதயாளன், ஏப்ரல் 27 முதல் ஆஸ்திரியாவின் லின்ஸில் நடைபெறும் WTT இளைஞர் போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்கேற்க இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஸ்வ தீனதயாளன் மறைவுக்கு மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.