சென்னை: அசானி புயல் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் மற்றும் நர்சாபூர் இடையே கரையைக் கடந்தது. இதனால் சென்னையில் இரண்டு நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலையாளர் தெரிவித்துள்ளார்.
அசானி புயல்
கடந்த வாரம் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்க கடலில் உருவான அசானி புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் மற்றும் நர்சாபூர் இடையே ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி கரையைக் கடந்தது. இதனையடுத்து மீண்டும் அது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு
2021ம் ஆண்டு உருவான ‘யாஸ்’ என்ற புயல் ஒடிசாவில் கரையைக் கடந்தது. இதையடுத்து, இந்த ஆண்டு மே மாத துவக்கத்தில் உருவாகியுள்ள ‘அசானி’ புயலால் வட தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது.
ஆந்திராவின் நிலை
இதனால் ஆந்திராவில் மணிக்கு 80 முதல் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் கனமழை பெய்யும் என்றும் எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஆந்திர பகுதியான கூடூர், நெல்லுலூர் துவங்கி, சிராலா, ஓங்கோல், குண்டூர், விஜயவாடா, மசூலிப்பட்டினம், காவாலி, அமலாபுரம் மற்றும் விசாகப்பட்டினம் வரை, பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது அதனால் அங்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் ஆந்திராவில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தும், பொதுத் தேர்வுகள் ஒத்தி வைத்தும் அந்த மாநில அரசு அறிவித்தது.
தமிழகத்தில் மழை
இந்நிலையில் தமிழகத்தில் தேனி, மதுரை, தென்காசி, திண்டுக்கல் நெல்லை போன்ற மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் கடத்த சில வாரங்களாக அக்னி நட்சத்திரத்தால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வந்த நிலையில், இந்த அசானி புயலால் இன்னும் இரண்டு நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து அண்ணாநகர், கிண்டி, நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், வில்லிவாக்கம் போன்ற சென்னை புறநகர் பகுதிகளில் கோடைக் கால வெப்பநிலை மாறி குளிர்ச்சியாக காணப்படுகிறது.