உலகம்தமிழ்நாடு

மருத்துவ தேவதைகளின் மகத்தான நாள்; சர்வதேச செவிலியர் தினம்!

தன்னலமற்ற மருத்துவ தேவதைகளின் மகத்தான பணிகளை போற்றும் வண்ணமாக, மே 12 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஃபுளோரென்ஸ் நைட்டிங்கேள்

நவீன செவிலியர் பணிக்கான நிறுவனராக கருதப்படும் ஃபுளோரென்ஸ் நைட்டிங்கேள் அவர்களின் பிறந்தநாளையே சர்வதேச செவிலியர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஃபுளோரென்ஸ் நைட்டிங்கேள் அவர்கள் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த தாதி(செவிலியர்) ஆவார். போர் காலங்களில் காயப்பட்ட வீரர்களுக்கு ஓய்வின்றி மருத்துவம் பார்த்தவர். செவிலியருக்கான பயிற்சி பள்ளியை முதன்முதலாக தொடங்கிய பெருமை இவருக்கே சேரும். இவரை விளக்கேந்திய சீமாட்டி (The Lady with the Lamp) என்றும் அழைப்பார்கள்.

கொரோனா பணி

நோய் தொற்றுக்கு பயந்து உலகமே வீட்டுக்குள் அடைக்கலம் கொண்ட காலத்தில் மக்கள் நலனுக்காக உழைத்த துறைகள் பல அவற்றில் மிக முக்கியமான மற்றும் அத்தியாவசியமான துறை மருத்துவத்துறை. அதிலும் செவிலியர்களுக்கே பணி நேரம் அதிகம். நோயாளிகளிடம் கொரோனா குறித்த பயத்தை இன்றளவும் நீக்கி கொண்டியிருக்கும் பெருமை இந்த மருத்துவ தேவதைகளையே சாரும்.

ஊக்கமும்,மன தைரியமும்

நோயாளிகளுக்கு ஊக்கமும் மன தைரியமும் கொடுத்து மன ரீதியாக அவர்களை நோயிலிருந்து விடுபட வைக்கும் இவர்களது சேவைகள் ஏராளம். இதுபோன்ற செயலுக்கு உதாரணமாக குஜராத் மாநிலத்தில் கொரோனா வார்டு ஒன்றில், நோயாளிகளின் கவலைகளை பறக்கடிக்கும் வகையில் செவிலியர்கள் கொரோனா பாதுகாப்பு உடையணிந்து பாலிவுட் பாடல் ஒன்றுக்கு நடனமாடினார்.

கொரோனா கட்டுப்பாட்டில் பங்கு

இந்த கொரோனா காலத்திலும் உயிரை துச்சமென எண்ணாமல் வீடுவீடாக, தெருதெருவாக சென்று கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி இன்று கொரோனா நோய்த்தொற்றை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வந்ததில் இவர்களின் பங்கு அதிகம்.

டிடிவி தினகரன் ட்விட்

‘நெருக்கடியான நேரத்திலும் நோயோடு போராடி இரவு பகல் என பாராது உழைப்பவர்கள் செவிலியர்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த செவிலியர்களின் வாழ்வாதார நிலை குறித்து  சிந்திக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமையாகும். ஆண்டுக்கு ஒருமுறை வாழ்த்துவதோடு மட்டும் இல்லாமல் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தையும், பணிச்சூழலையும் ஆட்சியாளர்கள் அமைத்து தர வேண்டும்.

இதற்காக செவிலியர்கள் அனைவரும் ஒன்று பட்டு வென்றிட வேண்டும்’ என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செவிலியர் தினத்தை முன்னிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Related posts