இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் பதவி விலகலை அடுத்து புதிய பிரதமரை நியமிக்க ஐக்கிய தேசிய கட்சி தலைவருக்கும் இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொருளாதார நெருக்கடி
கடந்த சில நாட்களாக இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்த்தப்பட்டன. வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் பிரதமரும் , அதிபரும் பதவி விலக வேண்டும் என வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களை இலங்கை முன்னாள் பிரதமர் கோத்தபய ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் தாக்கியதால் பெரும் வன்முறை வெடித்தது.
பிரதமர் பதவி விலகல்
மகிந்த ராஜபக்சேவின் வீடு தீயிட்டு எரிக்கப்பட்டது. ஆளுங்கட்சி அமைச்சர்களின் வீடுகள் மற்றும் ராஜபக்சே ஆதரவாளர்களின் வீடுகள் சூறையாடப்பட்டன. நாட்டின் சூழ்நிலை கைமீறி போனதால் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை விட்டு விலகினார்.
ஒரு வாரத்திற்குள் புதிய அரசாங்கம்
கலவர காட்சி அளிக்கும் இலங்கை மக்களுக்கு கோத்தபய ராஜபக்சே உரையாற்றியதாவது ‘கடந்த 9 தேதி நடைபெற்ற வன்முறையையும், அதற்கு முன் நடைபெற்ற வன்முறைகளையும் யாராலும் நியாயப்படுத்த முடியாது. வன்முறைகளை கையாள்வதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது உள்ள ஆட்சி நிர்வாகத்தை முன்னெடுக்க, ஒரு வாரத்திற்குள் புதிய அரசாங்கத்தை நிறுவ உள்ளோம்.
மக்களின் நம்பிக்கை உறுதிப்படுத்தப்படும்
நாடளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்சியின் சார்பில் மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் பிரதமர் மற்றும் அமைச்சரவை உருவாக்கப்படும். நாடு இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு அதிகாரம் கொண்ட அதிபர் முறையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இலங்கையின் புதிய பிரதமர்?
இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சி தலைவரான ரணில் விக்கிரமசிங்கை நியமிக்க அவரிடம் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாகவும், இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதியான சரத் பொன்சேகாவுக்கும் அழைப்பு விடுக்கபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.