உலகம்

பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகியின் படுகொலை.. வழக்கை சவுதி அரேபியாவுக்கு மாற்றிய துருக்கி நீதிமன்றம்!

மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகியின் படுகொலை மீதான விசாரணையை துருக்கி நீதிமன்றம் இடை நிறுத்தியுள்ளது.

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் மீது சந்தேகத்தை ஏற்படுத்திய இந்த வழக்கை அரசிடம் ஒப்படைப்பது கொலையை மூடிமறைக்க வழிவகுக்கும் என்று மனித உரிமை அமைப்புகள் எச்சரித்த போதிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையாளர் ஜமால் கஷோகியின் கொடூரமான கொலையில் குற்றம் சாட்டப்பட்ட 26 நபர்கள் சவுதி  நாட்டை சேர்ந்தவர்கள். அவர்கள் மீதான விசாரணையை இடைநிறுத்தவும், வழக்கை சவுதி அரேபியாவுக்கு மாற்றவும் துருக்கி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

பொருளாதார மந்த நிலையில் இருக்கும் துருக்கி, சவுதி அரேபியாவுடனும் அருகில் உள்ள பிற நாடுகளுடனும் உள்ள சிக்கலான உறவை சரி செய்ய முயற்சித்து வருகிறது. சவூதிக்கு எதிரான வழக்கை துருக்கி கைவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ரியாத் உறவுகளை மேம்படுத்தியதாக சில ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.

கடந்த வாரம், இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கை அரசுக்கு மாற்ற பரிந்துரைத்தார். துருக்கியின் நீதித் துறை அமைச்சரும் இந்த  பரிந்துரையை ஆதரித்தார். துருக்கி நீதிமன்றத்திற்கு அரசின் நடவடிக்கைகளில் திருப்தி இல்லை என்றால், நீதிமன்றமே விசாரணையை மீண்டும் தொடங்கும் என்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.

இந்த வழக்கை சவுதி அரேபியாவுக்கு மாற்ற வேண்டாம் என மனித உரிமை வழக்கறிஞர்கள் துருக்கியை வலியுறுத்தினர். “ஒரு கொலை வழக்கை குற்றம் சாட்டப்பட்டவர்கள் இடத்திற்கு மாற்றம் செய்யும் போது அதில் இருந்து தப்பிக்க அவர்களுக்கு வழி செய்து கையில் கொடுப்பது போல் ஆகி விடும்” என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் பொதுச்செயலாளர் ஆக்னஸ் காலமார்ட் கூறினார்.

பட்டத்து இளவரசரைப் பற்றி விமர்சித்து எழுதிய கஷோகியை, இஸ்தான்புல்லுக்கு அனுப்பப்பட்ட சவுதி ஏஜென்ட்கள் கொடூரமாக தாக்கி கொன்றதாக துருக்கிய அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். இஸ்தான்புல்லுக்கு அனுப்பப்பட்ட இந்த குழுவில் ஒரு தடயவியல் மருத்துவர், உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பட்டத்து இளவரசர் அலுவலகத்தில் பணிபுரிந்த நபர்கள் அடங்குவர். கஷோகியின் உடல் பாகங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

Related posts