தமிழ்நாடு

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. மருத்துவக் கல்லூரிகளில் 7.5% இட ஒதுக்கீட்டை உறுதி செய்தது உயர் நீதி மன்றம்!

தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி பாரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய சென்னை உயர் நீதிமன்ற அமர்வு இன்று நடைபெற்றது. மருத்துவத் தேர்வில், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மாநில அரசின் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை நீதிபதிகள் விசாரித்தனர். இறுதியில், மாநில அரசின் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பு வழங்கினர்.

நீட் தேர்வு அமலுக்குப் பிறகு, மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியன. அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் சமூக-பொருளாதார நிலையில் உள்ள வேறுபாடுகளை சுட்டிக்காட்டி நீதிபதி கலையரசன் கமிட்டி அறிக்கை தாக்கல் செய்தது. 2018-19 ஆம் ஆண்டில் அரசுப் பள்ளிகளில் இருந்து நான்கு மாணவர்களும், 2019-20 ஆம் ஆண்டில் ஐந்து மாணவர்களும் மட்டுமே அரசு ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

2021 ஆம் கல்வியாண்டு முதல் மாநில அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ இளங்கலைப் படிப்புகளில் தற்போதுள்ள இடஒதுக்கீட்டில் 7.5% இடஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளிக்கும் மசோதாவுக்கு தமிழக சட்டசபை ஒப்புதல் அளித்திருந்தது. தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET) தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு இது பொருந்தும்.

மாநகராட்சிப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள், ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள், வனத்துறைப் பள்ளிகள் மற்றும் அரசுத் துறைகள் மூலம் நிர்வகிக்கப்படும் அரசுப் பள்ளிகள் உள்ளிட்ட அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுவர்.

Related posts