தான் சொன்ன வேலையை செய்யாததால் ஆத்திரத்தில் 6 வயது பிஞ்சி குழந்தையை கரும்பால் அடித்தே கொன்ற தாய்.
கருத்துவேறுபாடு
திருவண்ணாமலை மாவட்டம் அரடாப்பட்டு கிராமம் மாரியம்மன் கோயில் தெருவில் சேர்ந்தவர் ஓட்டுநர் பூபாலன். கடந்த 2014ம் ஆண்டு பூபாலனுக்கும் சுகன்யா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு எட்டு வயதில் பிரசன்னதேவ் என்ற மகனும், ஆறு வயதில் ரித்திகா என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக பூபாலன் மற்றும் சுகன்யாவிற்கு இடையே கருத்து வேறுபாட்டால் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சுகன்யா தன் தாய் வீட்டிற்கு கோபித்து கொண்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். ஒவ்வொரு முறையும் சுகன்யாவை பெற்றோர் சமாதானம் செய்து கணவர் வீட்டிற்கு சேர்ந்து அனுப்பி வைப்பார்கள் என சொல்லப்படுகிறது.

தந்தையிடம் புகார்
இந்நிலையில், கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ரித்திகா பூபாலனிடம் அவர் வேலைக்காக வெளியே சென்று வரும் நேரத்தில் தாய் சுகன்யா செல்போனில் பேசுவது பற்றி கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் வீட்டில் அமைதியற்ற சூழ்நிலை உருவானதால் சிறுமி ரித்திகாவை கடுமையாக தாக்கியுள்ளார். அன்றிருந்தே ரித்திகாவின் மீது சுகன்யா கோவத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், ரித்திகாவை அடிக்கடி சுகன்யா அடித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

கரும்பால் அடித்து கொன்ற தாய்
சம்பவத்தன்று சுகன்யா தனது மகள் ரித்திகாவிடம் வேலை செய்யுமாறு கூறியுள்ளார். ஆனால் சிறுமி அதை கவனிக்காமல் விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுகன்யா சிறுமியை கரும்பால் கண்மூடித்தனமாக அடித்துள்ளார். சிறுமியின் கதறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சுகன்யாவை தடுத்துள்ளனர். உடனடியாக குழந்தையை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே உயிர் இழந்துவிட்டதாக கூறினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெறையூர் காவல் நிலைய போலீசார் சுகன்யாவை கைது செய்து திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், குழந்தை ரித்திகாவின் உடலை கைப்பற்றி காவல் துறையினர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

