காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் குடும்பத்துக்கு 20 லட்சம் ரூபாய் நிவாரண உதவியை தமிழக அரசு அறிவித்துள்ளது.
ராணுவ வீரருக்கு நிதியுதவி
ஜம்மு காஷ்மீரில் ரஜோரி பகுதியில் உள்ள ராணுவ முகாமில் இன்று காலை தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். பார்கல் பகுதியில் உள்ள ராணுவ முகாமின் தடுப்பு வேலியை தீவிரவாதீகள் தாண்டி செல்ல முயற்சித்துள்ளனர். அப்போது, ராணுவ வீரர்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்த தொடங்கினர். இரு தரப்பிலும் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர்கள் மூவர் வீரமரணம் அடைந்தனர். பதில் தாக்குதலில் இரு தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
இதில், மதுரை மாவட்டம், புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். அவரது இறப்பு குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த துயரமும் வேதனையும் அடைந்தேன். மேலும், ராணுவ வீரர் லட்சுமணன் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெர்வித்துக்கொள்வதோடு அவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன்’ என அறிவித்துள்ளார்.

