கல்விசமூகம்தமிழ்நாடு

பள்ளி பருவத்திற்கு திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின் !

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களோடு மாணவராக அமர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

பள்ளிகள் திறப்பு

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. மாணவர்களை வரவேற்க அனைத்து பள்ளிகளும் தயார் நிலையில் இருந்தது. இதனைத்தொடர்ந்து எல்.கே.ஜி முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு இன்று காலை சென்றனர். சில பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர்.

எண்ணும் எழுத்தும் திட்டம்

இந்தநிலையில், தமிழ்நாடு அரசு சார்பாக ‘எண்ணும் எழுத்தும்’ கற்றல் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. 8 வயதுக்கு உட்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் அடிப்படை கணிதத் திறனுடன் மற்றும் பிழையின்றி எழுதி, படிப்பதை உறுதி செய்வது தான் இந்த ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம். 2025ம் ஆண்டுக்குள் மாணவர்கள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவைப் பெறவேண்டும் என்பதே, இந்த ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தின் நோக்கம். இந்த திட்டத்தை திருவள்ளூர் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Stalin visit School

முதல்வர் ஆய்வு

அதன்பிறகு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பள்ளியில் உள்ள வகுப்பறையில் மாணவர்களோடு மாணவராக அமர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் ஆசிரியர் நடத்திய பாடத்தை கவனித்தார். அவருடன் சேர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பாடத்தை கவனித்தார்.

அதனைத்தொடர்ந்து மாணவர்களின் கழிவறைகளை பார்வையிட்டார். மேலும், மாணவர்களுக்கு சமைக்கப்படும் உணவு கூடத்தை ஆய்வு செய்த முதலமைச்சர், ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளிடமும் சிறப்பாக செயல்படுமாறு அறிவுறுத்தினார்.

ஸ்டாலின் வாழ்த்து

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்து கூறி வெளியிட்டுள்ள பதிவில், ‘இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றது. துள்ளி வரும் பிள்ளைச் செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன். கொரோனா என்ற பெருந்தொற்றால் பள்ளிக்கு நேரில் வந்து பயிலும் முறை தடைபட்டது. இருந்தாலும் ஆன்லைன் மூலமாகக் கல்வி கற்றீர்கள். ஆனாலும் பள்ளியில் அமர்ந்து கற்கும் அனுபவத்துக்கு இணையானது ஏதுமில்லை. பள்ளிச்சூழலே கற்கும் திறனையும், அறிவாற்றலையும் மேன்மைப்படுத்தும். இடையில் தடைபட்ட வாய்ப்பை இப்போது அதிகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாணவ மாணவியர் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்’.

Related posts