பக்கவாதத்தால் நடக்க முடியாமல் அவதிப்படுவோர்க்கு அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையின் கைநுட்பத் துறை பேராசிரியர் டாக்டர் தீபா சூப்பர் டிப்ஸ் சொல்லுகிறார்.
பக்கவாதம்
பக்கவாதம் என்பது உடலில் ஒரு பக்க உறுப்புக்கள் செயலழிக்கும். இதன் விளைவாக ஒரு சிலருக்கு வாய் ஒழுங்கற்று போய் பேச்சு சரியாக இருக்காது. பொதுவாக ரத்த அழுத்தம் அதிகரித்தாலோ நல்ல கொழுப்புகள் குறைந்து கெட்ட கொழுப்புகள் அதிகமானாலோ பக்கவாதம் வர வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு சிலருக்கு ஒரு கை, ஒரு கால் செயலற்று நடக்க முடியாத நிலை ஏற்படும்.இந்த நிலை ஏற்பட்டால் படுத்த இடத்திலேயே முடங்கி விட வாய்ப்புள்ளது. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. பக்கவாதத்திற்கு இயற்கையான முறையிலும் இலவசமாகவும் சிகிச்சை பெறலாம் என்கிறார் டாக்டர் தீபா.
வகைகள்
இதுகுறித்து டாக்டர் தீபா கூறுகையில், ‘மூளை பகுதிக்கு செல்லகூடிய ரத்த ஓட்டம் சீராக இல்லாத போது ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாதம் வர வாய்ப்புள்ளது. பக்கவாதம் வர சொல்லப்படும் காரணங்கள் ரத்த அழுத்தம் அதிகரித்தல், கொழுப்பு அதிகரித்தல், முதியவர்களுக்கு மூளைக்குச் செல்லக் கூடிய ரத்த ஓட்டம் குறைந்தால் ரத்த குழாய்களில் ரத்தம் உறைந்தாலும் பக்கவாதம் வரும்.

மேலும், மூளையில் கட்டி, முதுகு தண்டுவடத்தில் பிரச்சினை இருந்தாலும் பக்கவாதம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஹெமிப்ளீஜியா எனப்படும் ஒரு பக்க பக்கவாதம். பாராப்ளீஜியா எனப்படும் இரு கால்களிலும் செயலிழக்கும் தன்மை பக்கவாதம் . குவாட்ப்ளீஜியா என்பது இரு கைகளும், இரு கால்களும் செயலிழக்கும் பக்கவாதம். இவ்வகை பக்கவாததிற்கு அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கிறோம்.
சிகிச்சை
90 வயது மதிக்கதக்க பெரியவர் ஒருவர் மருத்துவமனைக்கு வீல்சேரில்தான் வந்தார். அவருக்கு பக்கவாதத்தால் இரு கால்களும் செயலற்று இருந்தது. அவருக்கு 12 நாட்களில் சிகிச்சை அளித்துள்ளோம். 12 நாட்களுக்கு பிறகு, டிஸ்சார்ஜ் ஆகும் போது அவர் நடக்கவே தொடங்கிவிட்டார்.
இன்னொரு நபர் ஒரு காலில் பக்கவாதம் ஏற்பட்ட எங்கள் மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு சர்க்கரை நோயும் இருந்தது. ஒரு மாதம் சிகிச்சைக்கு பிறகு அவர் வேகமாக நடக்க தொடங்கிவிட்டார். அவருக்கு தசைகளை வலுப்படுத்த சிகிச்சை அளித்தோம். நம் மருத்துவமனையில் அக்குபஞ்சர், அக்குபிரஷர், மசாஜ் தெரபி, யோகா பயிற்சி, தியான பயிற்சி, சுவாச பயிற்சி, உள்ளிட்டவை கொடுக்கப்படுகிறது. இப்பயிற்சிகள் மூலம் மன உளைச்சலையும் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த முடியும். உப்பு குறைந்த உணவுகள், பதப்படுத்தப்படாத உணவுகள், சிறு தானியங்கள், முளைக் கட்டிய பயறு வகைகள் கொடுக்கப்படுகின்றன.
சிகிச்சைகளை மருத்துவமனையில் தங்கியும் எடுத்து கொள்ளலாம். இல்லையன்றால் அவர்கள் வீடுகளில் தங்கி, நாங்கள் சொல்லும் வகையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என்றார் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையின் கைநுட்பத் துறை பேராசிரியர் டாக்டர் தீபா.

