மது போதையில் தகராறு செய்த போலீஸ்காரரை கண்டித்ததால், எஸ்.ஐ.யின் தலையை கல்லால் தாக்கி உடைத்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம்
சிவகங்கை மாவட்டம் கீழபூவந்தியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி (32). இவர் இளையான்குடி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் முத்துப்பாண்டி போதை தலைக்கேறிய நிலையில் பூவந்தி கடைவீதியில் உள்ள சலூன் கடையின் உரிமையாளர் பாஸ்கரன் என்பவரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் பரமசிவம் (53). இவர் சிவகங்கை மாவட்டம் பூவந்தி காவல் நிலையத்தில் எஸ்.ஐயாக பணியாற்றி வருகிறார். பரமசிவம் கடந்த செவ்வாய் கிழமை இரவு பூவந்தி சோதனைச்சாவடியில் பணியில் இருந்தார்.

போர் வண்டி சோதனைச்சாவடி
அப்போது அங்குவந்த பாஸ்கரன் போர் வண்டி சோதனைச்சாவடியில் நின்று கொண்டிருந்த எஸ்.ஐ பரமசிவனிடம் இந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார். எஸ்.ஐ சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பூவந்தி கடைவீதியில் தகராறில் ஈடுபட்ட காவலர் முத்துப்பாண்டி தட்டிக் கேட்டு, எச்சரித்து அங்கிருந்து அப்புறப்படுத்தி வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.

கல்லால் தாக்குதல்
அதனால் முத்துப்பாண்டி, எஸ்.ஐ பரமசிவம் மீது கடும் கோபத்தில் இருந்து உள்ளார். நேற்று காலை பூவந்தி சோதனை சாவடியில் பணியில் இருந்த எஸ் .ஐ பரமசிவனிடம் சென்ற முத்துப்பாண்டி ‘நானும் போலீஸ்காரன் தான், என் மீதும் இரண்டு வழக்குகள் இருக்கிறது, நீ என்னையவே கண்டித்து அனுப்புகிறாயா?’ என கூறி தகராறு செய்து அருகில் இருந்த கல்லை எடுத்து எஸ்.ஐ பரமசிவம் மண்டையில் கடுமையாக தாக்கியுள்ளார்.

வழக்குப்பதிவு
இதில் படுகாயமடைந்த எஸ்.ஐ. பரமசிவம் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பூவந்தி போலீஸார் வழக்கு பதிவு செய்து முத்துப்பாண்டியை கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள முத்துப்பாண்டி இளையான்குடி காவல் நிலையத்தில் போலீசாக பணிபுரிகிறார்.
அடிக்கடி மது அருந்தியதால் அவர்மீது ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது பணிக்கு செல்லாமல் இருந்து வருகிறார். மது போதையில் தகராறு செய்த காவலரை தட்டிக்கேட்ட எஸ்.ஐயின் மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

