மஹாராஷ்டிரா மாநிலத்தில் நிலவும் அரசியல் நெருக்கடி காரணமாக அதன் தலைநகர் மும்பையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிவசேனா கட்சி
மராட்டியம் மராட்டியர்களுக்கே என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது சிவசேனா கட்சி. மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மகாவிகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது அந்த கட்சிக்குள் இருந்தே வந்த எதிர்ப்பு குரலால் உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி ஆட்டம் கண்டுள்ளது.
அதிருப்தி எம்எல்ஏக்கள்
பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று சிவசேன கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள், முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்கள். அதன்தொடர்ச்சியாக சுமார் 40 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஒன்றுகூடி கடந்த 20ம் தேதி நள்ளிரவு குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள நட்சத்திர விடுதிக்கு சென்றனர். இதனால் அதிருப்தி எம்எல்ஏக்கள் 16 பேரை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
உத்தவ் தாக்ரே உருக்கம்
பின்னர் அவர்கள் புதன்கிழமை மற்றொரு பாஜக ஆளும் மாநிலமான அசாமில் உள்ள கவுகாத்தியில் தங்கியுள்ளனர். அதே சமயத்தில் முதலமைச்சர் உத்தவ் தாக்ரே, தனது கட்சி தொண்டர்களிடம் உருக்கமாகப் பேசியுள்ளார். ஆளும் சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே பக்கம் பெரும்பாலான எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள்.
144 தடை உத்தரவு
இதனால் சிவசேனா கட்சியினர் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. இதன்தொடர்ச்சியாக மாநிலத்தில் பல்வேறு இடங்களில் அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு எதிராக போராட்ட சூழல் நிலவுகிறது. இதனால் மகாராஷ்டிராவில் நிலவி வரும் அரசியல் நெருக்கடி தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. தலைநகரில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை அதிகரித்து வருவதால், மும்பை போலீஸார் 144 தடை உத்தரவு விதித்துள்ளனர்.
மும்பை காவல்துறை விடுத்த இந்த தடை உத்தரவு ஜூலை 10 வரை அமலில் இருக்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. பதற்றமான சூழ்நிலையை சமாளிக்க மாநில காவல்துறை இந்த உத்தரவை அமல்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.