அரசியல்தமிழ்நாடு

கருப்பு என்றாலே திராவிடனா? தமிழர்கள் கருப்பாக இருக்கக் கூடாதா? சீமான் கேள்வி!

அம்பேத்கர் அன்ட் மோடி என்கிற புத்தகத்திற்கு இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார். அதில், “பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்” என்று பிரதமர் மோடியைப் புகழ்ந்து எழுதியுள்ளார்.

இளையராஜாவின் இந்த கருத்து சமூக வலையதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. இளையராஜாவிற்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

நேற்றைய தினம் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா கருப்பு நிற உடை அணிந்து, ‘கருப்பு திராவிடன், பெருமைக்குரிய தமிழன்’ என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவு பலராலும் பகிரப்பட்டது. அண்ணாமலை,  நானும் கருப்பு தமிழன்தான் என்று ஏற்கனவே கூறியிருந்தார்.

யுவன் சங்கர் ராஜாவின் பதிவு பற்றி கருத்து கூறியுள்ள சீமான், ‘தம்பி முதலில் குழப்பம்  வேண்டாம்’ என்று கூறினார். “தேவைப்பட்டால் இந்தியன் என்கிறார்கள், தேவைப்பட்டால் திராவிடன், தேவைப்பட்டால் தமிழன் என்று சொல்வார்கள். குழம்பாமல் பெருமைக்குறிய தமிழன் என்று சொல்லுங்கள்” என்றார்.

மேலும் “கேஜிஎப் பட ஹீரோ யாஷ் தான் பெருமைக்குரிய கன்னடன் என்றுதான் சொல்கிறார். அதே போல பெருமைக்குரிய தமிழன் என்று சொல்ல வேண்டியதுதானே. கருப்பா இருப்பவர்கள் எல்லாம் திராவிடர்களா? தென் ஆப்ரிக்காவில் கூட கருப்பாகத்தான் இருக்கிறார்கள். உழைக்கும் வர்க்கத்தின் நிறம் கருப்பு. உட்கார்ந்து சாப்பிடுபவர்கள் தோலின் நிறம் மினுமினுப்பாக இருக்கும். எருமை மாடு கூட கருப்பாகத்தான் இருக்கிறது, அப்போ அது திராவிடனா” என்று கேள்வி எழுப்பினார் சீமான்.

கருப்பு என்றாலே திராவிடன் என்றால் தமிழர்கள் கருப்பாக இருக்கக் கூடாதா? என்று கேட்டார்.

Related posts