விளையாட்டு

டூ பிளெசியின் அதிரடியான ஆட்டத்தால் சாய்ந்த லக்னோ அணி!

நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

பெங்களூர் அணி பேட்டிங்

பெங்களூர் அணியின் கேப்டன் டூ பிளெசிஸ் – அனுஜ் ராவத் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அனுஜ் ராவத் 3 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த விராட் கோலியும் பூஜ்ஜிய ரன்னிற்கு நடையைக் கட்டினார். சிறிது நேரம் அதிரடி காட்டிய தமிழ் நாட்டின் புது மாப்பிள்ளையான மேக்ஸ்வெல், 23 ரன்னிற்கு தன் விக்கெட்டை பறிகொடுத்தார். மறுமுனையில் கேப்டன் டூ பிளெசிஸ் தனித்து நின்று அணியின் ஸ்கோரை உயர்த்த போராடினார்.பின்பு வந்த சுயாஷ் பிரபுதேசாய் 10 ரன்னிலும், ஷாபாஸ் அகமது 26 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டூ பிளெசிஸ் சதமடிப்பார் என பெரிதும் எதிர்பார்த்த நிலையில் 96 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த பெங்களூரு அணி 181 ரன்கள் சேர்த்தது. லக்னோ அணியில் ஜேசன் ஹோல்டர், துஷ்மந்த சமீரா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

லக்னோ அணி பேட்டிங்

182 ரன்களை வெற்றி இலக்காக துரத்திய லக்னோ அணியின் தொடக்க வீரர் குயின்டன் டி காக் 3 ரன்னிலும், பின்னர் வந்த மணீஷ் பாண்டே 6 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். மறுமுனையில் அணிக்கு நிதானமான தொடக்கத்தை கொடுத்த கேப்டன் கே.எல். ராகுல் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.அடுத்து வந்த க்ருனால் பாண்டியா சிறிது நேரம் அதிரடி காட்டி 42 ரன்னில் வெளியேறினார். குறுகிய இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து வெற்றிக் கனியை எட்ட தடுமாறி வந்த லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 163 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி‌ வெற்றி பெற்றது. பந்துவீச்சில் மிரட்டிய பெங்களூரு அணியின் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Related posts