விளையாட்டு

சென்னைக்கு முதல் வெற்றி .. வானவேடிக்கை காட்டிய உத்தப்பா – துபே ஜோடி!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 21-வது லீக் ஆட்டம் மும்பை டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின‌.‌ இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் பந்துவீச்சை தேர்வுசெய்தார்.

வானவேடிக்கை காட்டிய சென்னை

சென்னை அணியின் தொடக்க வீரர்களாக உத்தப்பா மற்றும் கெய்க்வாட் களமிறங்கினர். இந்த சீசனில் ரன் எடுக்க முடியாமல் திணறி வந்த கெய்க்வாட், இந்த ஆட்டத்திலும் 17 ரன்னில் வெளியேறினார். பின்னர் வந்த மொயீன் அலி 3 ரன்கள் எடுத்து ரன்-அவுட் ஆனார். சென்னை அணி பவர் பிளேவில் நல்ல தொடக்கம் கிடைக்காமல் திணறியது. இந்நிலையில் ஜோடி சேர்ந்த ராபின் உத்தப்பா மற்றும் ஷிவம் துபே ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஆட்டத்தின் பிற்பகுதியில் அதிரடி காட்டிய இந்த ஜோடி மைதானத்தின் மூலை முடுக்கெல்லாம் பந்துகளை பறக்க விட்டனர். 50 பந்துகளில் 4 பவுண்டரிகள் 9 சிக்ஸர்கள் என மிரட்டல் அடி அடித்த உத்தப்பா 88 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். உத்தப்பாவின் விக்கெட்டுக்கு பின் வந்த கேப்டன் ஜடேஜா, வந்த வேகத்தில் நடையைக் கட்டினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு சென்னை அணி 216 ரன்கள் குவித்தது. ஆட்டமிழக்காமல் இருந்த ஷிவம் துபே 95 ரன்கள் விளாசினார். இதனால் பெங்களூரு அணிக்கு 217 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பெங்களுரு அணியில் ஹசரங்கா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பெங்களூரின் மோசமான தொடக்கம்

217 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய பெங்களுரு அணிக்கு நல்ல தொடக்க கிடைக்கவில்லை. பவர் பிளே முடிவதற்குள் அந்த அணி கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ், அனுஜ் ராவத், விராட் கோலி ஆகிய மூவரின் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்னை அணிக்கு குடைச்சல் கொடுத்து வந்த சுயாஷ் பிரபுதேசாய் 34 ரன்களிலும், ஷாபாஸ் அகமது 41 ரன்களிலும், தினேஷ் கார்த்திக் 34 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை பறிகொடுத்த பெங்களுரு அணி 193 ரன்கள் மட்டுமே சேர்த்து, 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. சென்னை அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி சுழலில் வித்தை காட்டிய மகேஷ் தீக்ஷனா 4 விக்கெட்டுகளையும், கேப்டன் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். சென்னை அணிக்காக 95 ரன்களை விளாசிய ஷிவம் துபே ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

Related posts