அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினரான ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு ஆதரவு தெரிவித்து சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சசிகலா அறிக்கை
இது குறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அதிமுகவின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினரை, கட்சியின் சார்பில் செயல்படுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை, கழகத் தொண்டர்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கட்சியின் நலனைக் காற்றில் பறக்கவிட்டு எடுத்த தவறான முடிவுகளால், நாடாளுமன்ற மாநிலங்களவையில் நமது உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்ததோடு, கட்சியின் அங்கீகாரத்தையும் இழந்து நின்றோம்.
இந்நிலையில், கட்சியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற ஒரே ஒரு மக்களவை உறுப்பினரை, கட்சியைவிட்டே நீக்குவதும், நாடாளுமன்றத்தில் அதிமுகவின் பெயரைச் சொல்வதற்கு யாருமே வேண்டாம் என்று கண்மூடித்தனமாக முடிவு எடுப்பதையும் கழகத் தொண்டர்கள் ஒரு நியாயமற்ற செயலாகத்தான் பார்ப்பார்களே தவிர, ஒரு அறிவார்ந்த செயலாக யாருமே பார்க்க மாட்டார்கள்’ என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

