மரத்திலிருந்து பிளாஸ்டிக் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை பற்றி இந்த கட்டுரையில் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
செல்லுலோஸ், ஸ்டார்ச் ஆகியவை தாவரங்களின் பகுதிப்பொருட்கள் ஆகும். செல்லுலோஸில் இருந்து HMF (5-hydroxymethylfurfural) எனப்படும் மூலப்பொருளை தயாரிக்க இயலும்.
HMF ஐ அடிப்படையாகக் கொண்டு பிளாஸ்டிக்குகளையும் சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்காத எரிபொருளையும் உற்பத்திசெய்ய இயலும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் நம்பிக்கை பிறந்திருக்கிறது.

வடமேற்கு பசிபிக் தேசீய ஆய்வுக்கூடத்தின் (Department of Energy’s Pacific Northwest National Laboratory) ஆற்றல் துறையில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. HMF மூலம் தயாரிக்கப்படும் எரிபொருள் விலை குறைவாகவும் தடையின்றி கிடைக்கக்கூடியதாகவும் இருக்குமாம்.
இதே துறையில் இதற்கு முன்னாலும் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. முன்னர் நடத்தப்பட்ட ஆய்வுகளில் செல்லுலோஸில் இருந்து முதலில் எளிய சர்க்கரை பெறப்பட்டது. பின்னர் எளிய சர்க்கரையில் இருந்து குரோமியம் குளோரைடு போன்ற உலோக குளோரைடுகளையும், அயானிக் திரவம் என்ற கரைப்பானையும் பயன்படுத்தி தூய்மையான HMF ஐ தயாரித்தனர்.
தற்போதைய புதிய கண்டுபிடிப்பில் செல்லுலோஸை சர்க்கரையாக மாற்றாமல் நேரடியாக HMF பெருமளவில் உருவாக்கப்பட்டுள்ளது. தேவையான மூலப்பொருளாகிய செல்லுலோஸ் மரம், தானியங்கள், புற்கள் இவற்றிலெல்லாம் அபரிமிதமாக காணக்கிடைக்கிறது.

புதிய கண்டுபிடிப்பில் குரோமியம் குளோரைடு-தாமிர குளோரைடு கரைசல் அயானிக் திரவத்துடன் இணைந்து 120 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் செல்லுலோஸை HMF ஆக மாற்றமடையச்செய்கிறது. இந்த புதிய முறையில் 90 சதவீத HMF உருவாக்கப்பட்டது.
அத்துடன் உலோக குளோரைடுகளையும் அயானிக் திரவத்தையும் அவற்றின் வீரியம் குறையாமல் மீண்டும் மீண்டும் பயன்படுத்த இயலும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மறுசுழற்சிமுறையால் HMF ன் விலை பெருமளவில் குறையும் என்பதுடன் குறைந்த செலவில் அதிகமான பிளாஸ்டிக் தயாரிக்கவும், படிம எரிபொருளுக்கு மாற்றுப்பொருளாக எரி எண்ணை தயாரிக்கவும் இயலும்.

