Editor's Picksஅரசியல்தமிழ்நாடு

தூத்துக்குடி திமுகவில் உட்கட்சி பூசல் – பாய்ந்தது குண்டாஸ் – அமைச்சரின் பழிவாங்கும் நடவடிக்கையா ?

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை செல்போனில் கடுமையாக தீட்டிய ஒன்றிய செயலாளர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்ததால் பரபரப்பு.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று அமைச்சராக இருப்பவர் அனிதா ராதாகிருஷ்ணன். தூத்துக்குடியில் திமுகவில் செல்வாக்கு பெற்ற நபர். அதேசமயம் இவரை சுற்றி நடக்கும் சர்ச்சைகளுக்கு பஞ்சம் கிடையாது. அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு நடந்ததாக கூறப்படும் தொலைபேசி உரையாடல் தற்போது வைரலாகி வருகிறது.

கருங்குளம் ஒன்றியசெயலாளர்

அதாவது, சிறுவைகுண்டம் ஒன்றிய முன்னாள் திமுக செயலாளராக இருந்தவர் வைகுண்ட பாண்டியன். இவர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தார். இதையடுத்து கருங்குளம் ஒன்றிய செயலாளர் பதவியை அமைச்சர் அளித்தார். இவர்களது நட்பு சீராக சென்று கொண்டிருந்த நிலையில் கல்குவாரி விஷயத்தில் மோதல் உண்டாக்கியதாக கூறப்படுகிறது. பத்மநாபமங்கலத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமாக கல்குவாரி ஓன்று செயல்பட்டு வருகிறது.

இதற்கு கிராம மக்கள் தொடர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஒரு கட்டத்தில் கிராம மக்களுக்கு ஆதரவாக வைகுண்ட பாண்டியன் மாறியதாக தெரிய வருகிறது. இதன் காரணமாக அமைச்சருக்கு வைகுண்ட பாண்டியனுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

செல்போன் உரையாடல்

இந்த சூழலில் இருவரும் செல்போனில் பேசியுள்ளனர். அதில் ‘கம்பெனியை எதிர்த்து நோட்டீஸ் ஓட்றீங்களாமே ? செலவு செய்ததை சொல்லி கேட்டால் அதை கொடுக்கலாம், அதுக்குன்னு 1 லட்சம் கொடுக்க வந்தவரிடம் 15 லட்சம் ரூபாய் கேட்டீங்கலாமே. நாங்க தொழில் பண்ணனுமா ? வேண்டமா ?’ என்கிறார் அமைச்சர். அதற்கு பதிலளித்த வைகுண்ட பாண்டியன், ‘அது உங்க இஷ்டம். நான் ஒன்றிய செயலாளராக வர ஒரு கோடி வரை செலவு செய்திருப்பதாகவும் ஆனால் நீங்க என்னை கண்டுக்க மட்றீங்லே’ என கூறியுள்ளார்.
‘உடனே நான் நினைத்தால் உன்னை பஞ்சாயத்தை விட்டே தூக்கி விடுவேன்’ என அமைச்சர் கூற பேச்சு சூடுபிடித்தது. ‘அப்படி பஞ்சாயத்து பதவி போனால் உன்னை மேடை ஏறவே விடமாட்டேன்’ என கூறி தகாத வார்த்தைகளால் அமைச்சரை வைகுண்ட பாண்டியன் திட்டியுள்ளார். இந்த செல்போன் உரையாடல் சில மாதங்களுக்கு முன்பு வந்ததாகவும் சில வருடங்களுக்கு முன்பு நடந்தது என்றும் இருவேறு கருத்துக்கள் உலா வருகின்றது.

குண்டாஸ் சட்டம்

தற்போது வைகுண்ட பாண்டியன் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது. தனது கல்குவாரிக்கு செயல்படுவதற்கு ஒன்றிய செயலாளர் தடையாக இருந்ததால் இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கையா ? இல்லை ஏற்கனவே வைகுண்ட பாண்டியன் மீதிருக்கும் பல்வேறு வழக்குகளின் நீட்சியா இந்த குண்டர் சட்டம் ? என்ற கேள்வி எழுகிறது. இந்த விஷயத்தால் தூத்துக்குடி திமுக வட்டாரத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

 

Related posts