தமிழ்நாடு காவல்துறையில் துணை இராணுவத்தினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கூடாது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாடு காவல்துறை நியமனங்களில் முன்னாள் துணை இராணுவத்தினருக்கு அளிக்கப்பட்டு வந்த 5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாகவும், இனி முன்னாள் இராணுவத்தினருக்கு மட்டும் தான் அத்தகைய இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அத்தகைய முடிவு தவறு. ராணுவமும் காவல்துறையும் ஒன்றல்ல என்றாலும், அவற்றின் பணி நாட்டைக் காப்பது தான். அதனால் தான் அப்படைகளின் முன்னாள் வீரர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
இந்தியாவின் பல மாநிலங்களில் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படும் நிலையில், தமிழகத்தில் மட்டும் இதை மறுப்பது நியாயமற்றது. காவல்துறை நியமனங்களில் இந்த இட ஒதுக்கீடு தொடர வேண்டும். அதற்கேற்ற வகையில் திருத்தப்பட்ட காவலர் தேர்வு அறிவிக்கையை வெளியிட வேண்டும்’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

